மதிய உணவு நேரத்தில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது மழை வந்தது. 'டேய் என்னடா திடீர்னு மளை வருது' என்றான் ஒருவன். இன்னொருவனும் 'ஆமாம் இப்போ போய் மளை வருதே..' என்று ஆச்சரியப்பட்டான். நான், 'அது மளை இல்லடா, மழை' என்றேன். 'இவனுக்கு இதே வேலைதான், நாங்க சரியாத்தான் சொல்லுறோம்' என்று என்னை திட்டி விட்டு அவர்கள் மீண்டும் 'மளை'யைப் பற்றி பேச ஆர்மபித்து விட்டார்கள். எனக்கோ சரியான எரிச்சல்.
'டேய், தமிழ்ல எத்தனை 'la'?' என்றேன். "மூணு" என்றனர் இருவரும் ஒரே நேரத்தில். நான் அதிர்ந்து போய் விட்டென், நமக்குத் தெரியாமல் தமிழில் இன்னொரு 'ல' இருக்கிறதாவென. அது என்ன என்றபோது, 'ல, ள, ள' என்றனர். மேலும் கடுப்பான நான், 'எழுதி காட்டுங்கடா' என்றேன். ல, ள, ழ என்று எழுதி காட்டி 'தோ, இது தான் மூணாவது 'ல' என்று 'ழ'வைக் காட்டினர். 'உங்களுக்கு இப்பிடித்தான் பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுத்தாங்களா' என்றால் 'ஆமாம், இப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்க' என்று ஆணித்தரமாக கூறினர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள்தான் என்றில்லை பழைய தஞ்சை, தென்னாற்காடு, வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரும்பாலானோருக்கு 'ழ' வருவதில்லை. தமிழ் 'தமிள்' தான், மழை 'மளை' தான். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. இத்தனை நாளும் இவர்கள் தவறாக உச்சரிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன், இப்போதுதான் தெரிகிறது இவர்கள் தாம் உச்சரிப்பது சரி என்று நினைத்துதான் உச்சரிக்கிறார்கள் என்று.
இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் 'ழ'வை சரியாக உச்சரிக்க முடிந்தும் அதை 'ள' என்று உச்சரிப்பதை 'ஃபேஷனாக' சிலர் நினைக்கின்றனர்.
நான் மேலே சொன்ன வகையினர் 'ழ' வரவே வராத வகை. ஆனால், நான் நேற்று ஈழத்து கொக்குவில்லைச் சேர்ந்த நண்பர் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழை 'தமிழ்' என்று சரியாக உச்சரிக்கிறார், ஆனால் 'வாழைப்பழம்' அவருக்கும் 'வாளைப்பளம்' தான். நீங்கள் சரியாக உச்சரிக்கவில்லை என்று அவருக்கு விளக்க மிகவும் சிரமப்பட்டேன். நான் சொல்வது சரிதானோ என்று அவர் இப்போதுதான் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார், இன்னும் ஒத்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் 'ல' மற்றும் 'ள' வை மிகத் தெளிவாக வேறுபடுத்தி உச்சரிப்பவர் அவர்.
எங்கே பிரச்னை? நான் தான் தவறாக உச்சரித்துக் கொண்டிருக்கிறேனோ...