Friday, July 29, 2005

கூடன்பெர்க் திட்டு

செவ்வியல் இலக்கியங்களையும் இன்னபிற இலக்கியங்களையும் ஒரிடத்தில் சேர்த்து வைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நல்ல முயற்சி இந்த கூடன்பெர்க் திட்டு. பல்வேறு மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட இலவச மின்புத்தகங்களை இந்த கூடன்பெர்க் திட்டில் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள் பலரும் தங்கள் நேரத்தை செலவிட்டு புத்தகங்களை உள்ளிடுகிறார்கள். காப்புரிமை பிரச்னை இல்லாத புத்தகங்கள் மட்டுமே இடப்படுகின்றன. இலவசமாக தரவிறக்கிக் கொள்ளக் கூடிய இந்த புத்தகங்கள், இணையம் இல்லாதவர்களின் வசதிக்காக CD அல்லது DVD-யிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. CD/DVD-யை நீங்கள் கோரினால், யாரோ ஒரு தன்னார்வலர் உங்களுக்கு அவருடைய செலவில் இரண்டு பிரதி அனுப்பி வைப்பார்; ஒன்று உங்களுக்கு, இன்னொன்று நீங்கள் யாருக்காவது பகிர.

கூடன்பெர்க் திட்டின் இணைய தளம் அத்திட்டில் உள்ள எல்லா புத்தகங்களின் பட்டியலை வைத்துள்ளது. நூலாசிரியர் அல்லது நூலின் பெயரை வைத்து புத்தகங்களை தேடவும் செய்யலாம். புத்தகங்களின் உள்ளடக்கத்தில் தேட யாஹூவும் கூகிளும் உதவுகின்றன. புத்தகங்கள் TXT, PDF, PS(PostScript), PDB (Palm DB), Tex என்று பல வடிவங்களில் இருக்கின்றன. சில புத்தகங்கள் ஒலி புத்தகங்களாகவும் (Audio Books) கிடைக்கின்றன.

புதிய புத்தகங்களின் சேர்க்கையை அறிந்து கொள்ள ஒவ்வொரு இரவும் இற்றைப்படுத்தப்படும் RSS ஓடையும் உண்டு.

மு.கு: இந்திய மொழிகளில் சமஸ்க்ருதம்(?!) தவிர வேறெந்த மொழியிலும் நூல்கள் இல்லை. சமஸ்க்ருதத்திலும் ஒரே ஒரு நூல்தான் இருக்கிறது (இல்லை, இல்லை கருடபுராணம் இல்லை, அது விஷ்ணு சஹஸ்ரநாமம்)

இந்த நற்பணியை சத்தமில்லாமல் செய்து வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்! (தமிழ்ல நன்றி சொல்லி யாருக்கு தெரியப் போகுது, இருந்தாலும் நம்ம திருப்திக்காக..)

---
மு.கு என்றால் முக்கிய குறிப்பு என அறிவீராக :-)

9 comments:

வீ. எம் said...

நல்ல தகவலை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி சுதர்சன்!
வீ எம்

வசந்தன்(Vasanthan) said...

பயனுள்ள தகவலுக்க நன்றி.

Narain Rajagopalan said...

இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன். அது ரொம்ப காலத்துக்கு முன்பு. தமிழில் நூல்களை ஏற்ற என்ன வழிகள் இருக்கின்றன. எவையெல்லாம் ஏற்றலாம் போன்ற தகவல்களை பகிருங்கள். வேண்டுமானால், மனுஷ்யபுத்திரன், பத்ரி போன்ற பதிப்பாளர்களிடம் பேசிப் பார்க்கிறேன்.

Yagna said...

ஆனாலும் மதுரை திட்டத்தை பற்றி குறிப்பிடவில்லையே. தமிழுக்கான கூடன்பெர்க் ஆச்சே அது.
இவைகளிலும் விக்கிபீடியா போன்ற திட்டங்களிலும் பங்களிக்கும் ஆர்வலர்களுக்கு என்றென்றும் கடமைப் படுள்ளோம்.

வானம்பாடி said...

வீ. எம், வசந்தன், சாரா, நன்றிக்கு நன்றி! :)

யக்னா, இது கூடன்பெர்க் திட்டு பற்றிய அறிமுகம் மட்டுமே. மற்றபடி, மதுரைத் திட்டம் பற்றி பலரும் எழுதி விட்டார்களே.

நாராயணா, இதில் பதிப்பகத்தார் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என நினைக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள் பெரும்பாலும் ஒளியுணரப்பட்டு OCR மூலம் எழுத்துக்களாக மாற்றப்படுகின்றன. உங்களிடம் ஒரு ஒளியுணரியும் காப்புரிமை பிரச்னை இல்லாத புத்தகமும் இருந்தால் போதும், இந்த திட்டில் சமர்ப்பித்துவிடலாம். ஆணால் தமிழில் உள்ள OCR மென்பொருட்கள் எவ்வளவு திறம் வாய்ந்தவை என்று தெரியவில்லை. CDAC குறுந்தகட்டில் OCR மென்பொருள் ஒன்று இருந்ததாகப் படித்தேன்.

மின் புத்தகம் சமர்ப்பிப்பது பற்றிய மேல் விவரங்களுக்கு

வானம்பாடி said...

நாராயணா,
வேண்டுமானால், மனுஷ்யபுத்திரன், பத்ரி போன்ற பதிப்பாளர்களிடம் கூகிள் பிரிண்ட் பற்றி பேசிப் பாருங்கள். நன்றி.

இளங்கோ-டிசே said...

சுதர்சன், இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். தகவலுக்கு நன்றி.

NambikkaiRAMA said...

அருமையான தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி.

Ganesh Gopalasubramanian said...

சுதர்சன் நானும் இந்த தளத்திலிருந்து சில புத்தகங்களை இறக்கியிருக்கிறேன். நீங்கள் சொல்வது போலவே தன்னார்வலர்கள் நிறைந்திருக்கின்றனர். நம்முடைய மதுரைத் திட்டமும் அரும்பெரும் சேவையாற்றி வருகிறது.

உதாரணத்திற்கு சொல்லப் போனால் நம்முடைய மதுரைத் திட்ட PDF கோப்புகள்

"WORLD EBOOK LIBRARY" எனப்படும் உலக இணைய நூலகத்தில் கிடைக்கின்றன உதவிக்காக சுட்டி இங்கே http://netlibrary.net