Friday, July 29, 2005

கூடன்பெர்க் திட்டு

செவ்வியல் இலக்கியங்களையும் இன்னபிற இலக்கியங்களையும் ஒரிடத்தில் சேர்த்து வைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நல்ல முயற்சி இந்த கூடன்பெர்க் திட்டு. பல்வேறு மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட இலவச மின்புத்தகங்களை இந்த கூடன்பெர்க் திட்டில் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள் பலரும் தங்கள் நேரத்தை செலவிட்டு புத்தகங்களை உள்ளிடுகிறார்கள். காப்புரிமை பிரச்னை இல்லாத புத்தகங்கள் மட்டுமே இடப்படுகின்றன. இலவசமாக தரவிறக்கிக் கொள்ளக் கூடிய இந்த புத்தகங்கள், இணையம் இல்லாதவர்களின் வசதிக்காக CD அல்லது DVD-யிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. CD/DVD-யை நீங்கள் கோரினால், யாரோ ஒரு தன்னார்வலர் உங்களுக்கு அவருடைய செலவில் இரண்டு பிரதி அனுப்பி வைப்பார்; ஒன்று உங்களுக்கு, இன்னொன்று நீங்கள் யாருக்காவது பகிர.

கூடன்பெர்க் திட்டின் இணைய தளம் அத்திட்டில் உள்ள எல்லா புத்தகங்களின் பட்டியலை வைத்துள்ளது. நூலாசிரியர் அல்லது நூலின் பெயரை வைத்து புத்தகங்களை தேடவும் செய்யலாம். புத்தகங்களின் உள்ளடக்கத்தில் தேட யாஹூவும் கூகிளும் உதவுகின்றன. புத்தகங்கள் TXT, PDF, PS(PostScript), PDB (Palm DB), Tex என்று பல வடிவங்களில் இருக்கின்றன. சில புத்தகங்கள் ஒலி புத்தகங்களாகவும் (Audio Books) கிடைக்கின்றன.

புதிய புத்தகங்களின் சேர்க்கையை அறிந்து கொள்ள ஒவ்வொரு இரவும் இற்றைப்படுத்தப்படும் RSS ஓடையும் உண்டு.

மு.கு: இந்திய மொழிகளில் சமஸ்க்ருதம்(?!) தவிர வேறெந்த மொழியிலும் நூல்கள் இல்லை. சமஸ்க்ருதத்திலும் ஒரே ஒரு நூல்தான் இருக்கிறது (இல்லை, இல்லை கருடபுராணம் இல்லை, அது விஷ்ணு சஹஸ்ரநாமம்)

இந்த நற்பணியை சத்தமில்லாமல் செய்து வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்! (தமிழ்ல நன்றி சொல்லி யாருக்கு தெரியப் போகுது, இருந்தாலும் நம்ம திருப்திக்காக..)

---
மு.கு என்றால் முக்கிய குறிப்பு என அறிவீராக :-)

Friday, July 01, 2005

கெட்டது குடி - மைக்ரோசாப்ட் க்ளாரியாவை வாங்குகிறதாம்!

உளவு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான க்ளாரியாவை மைக்ரோசாப்ட் வாங்கப்போகிறதாம். இந்த க்ளாரியா 'கேட்டர்' என்ற பெயரில் உளவு மென்பொருள்களை தயாரித்து உங்கள் கணிணியில் திருட்டுத்தனமாக நிறுவிக் கொண்டிருந்தது. பல கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த இந்நிறுவனம் தனது பெயரை 'க்ளாரியா' என்று மாற்றிக் கொண்டு தனது சேவையை மட்டும் மாற்றாமல் தொடர்ந்து வந்தது. இப்பொழுதும் 'காசா' வை நிறுவும்போது கூடவே ஒட்டிக் கொண்டு க்ளாரியாவும் வந்து விடும். இப்படிப்பட்ட ஒரு ஒட்டுண்ணியை மென்பொருள் பெரியண்ணன் மைக்ரோசாப்ட் வாங்கப் போகிறது என்ற செய்தி வயிற்றில் புளிய மரத்தையே கரைக்கிறது.


இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'வலை மேயும் அனுபவத்தை பயனருக்கு இன்னும் சிறப்பாக்கப் போகிறோம்'. எப்படி? ;-) எப்படி சிறப்பாக்குவார்கள் தெரியுமா? உங்களின் வலை மேயும் பழக்கத்தை ஆராய்ந்து அதற்கேற்ற விளம்பரங்களை உங்களுக்கு காட்டுவார்கள். ஏற்கெனெவே IE-யிலும் MS Office-லும் 'ஸ்மர்ட் டக்ச்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி பலத்த எதிர்ப்பால் IE-யில் இருந்து மட்டும் பின்னர் தூக்கினார்கள். இந்த ஸ்மார்ட் டாக் செய்யும் திருவேலை என்னவென்று பார்ப்போம். என்னுடைய தளத்தில் நான் தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். மைக்ரோசாப்டிற்கு 'சமஸ்க்ருதவாசனை' தளத்துக்காரர்கள் வலை விளம்பரம் செய்ய காசு கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், என் தளத்தை IE-ல் மேயும்போது தமிழ்மணம் இணைப்பை சுட்டினால் அது 'சமஸ்க்ருதவாசனை' தளத்திற்கு கொண்டு போய் சேர்க்கும். இப்படியான 'அற்புதமான' பயனர் அனுபவம் உங்களுக்கு கிட்டும். நல்லவேளையாக பலத்த எதிர்ப்பால் இது கைவிடப்பட்டது.

இப்பொழுது க்ளாரியாவை வாங்கி என்ன விதமான திருவிளையாடல்களை நிகழ்த்த பெரியண்ணன் திட்டமிட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை மைக்ரோசாப்டின் அடுத்த இயங்குதளமான 'நீளக்கொம்பில்' (அதான் லாங்ஹார்ன் சாரே!) க்ளாரியாவின் நிரலும் சேர்த்தே நிறுவப்படலாம் அல்லது அவ்வளவு நாள் பொறுக்க முடியாவிட்டால் 'Windows Security Update' என்ற பெயரில் எளிதாக உங்கள் தற்போதைய இயங்குதளத்திலேயெ கூட நிறுவி விடலாம். எப்படி வசதியோ? ;-)

பி.கு:

என் பதிவை 77 சதவிகிதத்தினர் IE-ல தான் மேய்வதாக StatCounter காட்டுகிறது. அப்பப்பொ பயர்பாக்ஸ், ஓபரா போன்றவற்றிலும் மேயுங்கள், எதற்கும் பின்னர் கைகொடுக்கக் கூடும்.

லினக்ஸ் போன்ற இயங்குதளங்களையும் கவனிப்பது கூடுதல் நலம். 100 சதவிகிதம் (நான் உட்பட) ஏதோவொரு மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில்தான் மேய்கிறோம் என்கிறது என் பதிவுப் புள்ளிவிவரம். :(