Tuesday, December 21, 2004

உண்மையான உண்மை

உண்மையான உண்மை என்பது உண்மையில் எப்போதுமே வெளிவராமலேயே போய் விடுகிறது. இரு நபர்கள் மட்டுமே ஈடுபடும் ஒரு சாதாரண உரையாடலில் கூட, இது சாத்தியம். ஒரு உரையாடலின் போது ஒருவர் சொன்ன கருத்தை அவரே மற்றொரு உரையடலின் போது மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினால், மற்றவர் அதை நம்பக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். நிலைமை இவ்வாறிருக்க பலர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உண்மை வெளி வரும் வாய்ப்பு என்பது எவ்வளவு கடினம்? ஊடகங்கள் ஒரு புறம், அரசு ஒரு புறம், காவல் துறை ஒரு புறம், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் ஒரு புறம், சாட்சிகள் ஒரு புறம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேண்டப்பட்டவர்கள் ஒரு புறம் என்று பல புறங்களில் இருந்து வெளியிடும் உண்மைகளில் எந்த உண்மை உண்மையான உண்மை?

உண்மையில் தலை சுற்றிக் கிறு கிறுவென கிறுகிறுத்துப் போகிறது....


Saturday, December 18, 2004

தமிழகத் தொழில் துறைக்கு நல்ல காலம்!

Yahoo!, HP, Oracle போன்ற, சென்னையை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சென்னையில் கிளை பரப்ப இருக்கின்றன. 'சத்யம்' இந்தியாவிலேயே பெரிய கிளையை சென்னையில் தொடங்க இருக்கிறது. 'இன்போசிஸ்' சென்னையில் அதன் ஊழியர் எண்ணிக்கையை 25,000மாக விரிவுபடுத்துகிறது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலர் விவேக் அரி நாராயணன் சொல்வது உண்மையானால் ஒவ்வொரு இரண்டாவது நாளும் சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் தொடங்கப்படுகின்றது.
கோயம்புத்தூரும் இத்துறையில் நன்றாக வளர்கிறது. TCS தனது கோயம்புத்தூர் கிளையை விரிவுபடுத்தப் போகும் வேளையில் விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அங்கு கால் பதிக்கப் போகின்றன. திருச்சியையும் அரசு விளம்பரப்படுத்துகிறது.

ஜவுளித் துறையில் உலகளாவிய 'கோட்டா' முறை முடிவடைவதால் திருப்பூரும், கரூரும் ஜவுளித்துறையில் மாபெரும் வளர்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது. இத்துறையின் வேலை வாய்ப்பு தகவல் தொழில்நுட்பத் துறையை விட இரு மடங்காக வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பிலும் சென்னை சக்கை போடு போடுகின்றது. இந்த வளர்ச்சி எல்லாம் தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு நன்றாக இருப்பதாலா அல்லது மற்ற மா நிலங்களில் நிலைமை இதை விட மோசமாக இருப்பதாலா?


Wednesday, December 15, 2004

இடம் மாறிய மடம்?

ஜெயேந்திரர் கைது நாடகம் ஆரம்பித்ததிலிருந்தே ஒரு விஷயம் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவர் தம்பி ரகு மற்றும் சில 'மட' முக்கியஸ்தர்கள், வி.ஐ.பி பக்தர்களின் அந்தரங்கங்களைப் பற்றி ஓயாமல் 'உண்மை' விளம்பிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டு ஊடகங்கள் ஒரு அடிப்படையான விஷயத்தைப் பற்றி மட்டும் ஏனோ வாய் மூடி மௌனிக்கின்றன. அது காஞ்சி மடத்தின் உண்மையான வரலாறு ஐயத்திற்கிடமானது என்ற விஷயம்.

1840-ற்கு முன்னால் 'காஞ்சி' சங்கர மடம் என்பதே கிடையாது. 1820-களில் சிருங்கேரி சங்கர மடத்தின் கிளை ஒன்று கும்பகோணத்தில் துவக்கப்பட்டது. பின்னர் அது 1840-களில் காஞ்சிபுரத்திற்கு இடம் மாறியது. 1840ற்கு முந்தைய காஞ்சி நகர நிலப் பதிவுகள் இன்றைக்கு மடம் இருக்கும் இடம் வேறொருவருக்கு உரிமையானது என்று சொல்லுகின்றன. ஆனால் காஞ்சி மடத்து ஆசாமிகள் இதை வன்மையாக மறுக்கின்றனர். ஆதி சங்கரர் அவருடைய இறுதி காலத்தில் காஞ்சியில் வாழ்ந்தார் என்றும் அவரே இந்த ஐந்தாவது மடத்தை நிறுவினார் என்பதும் அவர்களின் வாதம். ஆதி சங்கரர் கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்தார், இந்த மடம் 2500 ஆண்டு காலம் பழமையானது என்று ஓயாமல் சொல்லி உண்மை போல தோன்ற வைத்துள்ளனர். ஆனால் உன்மையில் ஆதி சங்கரர் இந்தியாவின் நான்கு திசைகலிலும் நான்கு மடங்களை மட்டுமே நிறுவினார், வடக்கே பத்ரி நாத், கிழக்கே பூரி, மேற்கே த்வாரகா மற்றும் தெற்கே சிருங்கேரி. மேலும் அவர் வாழ்ந்த காலம் கி.பி 8ம் நூற்றாண்டின் இறுதி முதல் 9ம் நூற்றாண்டின் துவக்கம் வரை. 1940களில் இது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் இந்திய உச்ச நீதி மன்றமும் ஆதி சங்கரர் நிறுவியவை நான்கு மடங்களே என்று தீர்ப்பளித்துள்ளது. காஞ்சி மடத்தின் முதல் பீடாதிபதி 'சுரேஸ்வரர்' என்று மடம் கூறுகிறது, ஆனால் சிருங்கேரி மடமும் தங்கள் முதல் பீடாதிபதியாக சுரேஸ்வரரையே கூறுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இந்த மடத்தின் வரலாறு ஒரு மர்மமாகவே இருந்து வந்திருக்கிறது. முந்தைய பீடாதிபதியான 'பரமாச்சாரியார்' என்றழைக்கப்பட்ட சந்திரசேகரரின் கண்டுபிடிப்பில் உருவானதுதான் இந்த வரலாறு. காஞ்சி மடத்தின் பக்தர்களான ஊடக அதிபர்களின் அரிய தொண்டால் இது உண்மை போலவே ஆக்கப்பட்டு விட்டது. வட நாட்டு ஆங்கில செய்தியேடுகளும், வார இதழ்களும் சொல்லும் இந்த விஷயத்தைப் பற்றி ஏன் தமிழ் நாட்டு ஊடகங்கள் ஒன்று கூட பேசவில்லை? 'பகுத்தறிவு பகலவனின்' குடும்ப ஊடகங்கள் கூட இது பற்றி வாய் திறக்கவில்லையே ஏன்?

சந்திரசேகரர் ஏதொ தெய்வம் போல ஆக்கப்பட்டுவிட்டார். தி.மு.க தலைவர் கூட அவரின் மாண்பைப் பற்றியும் மடத்தின் பாரம்பரியத்தைப் பற்றியும் பேசுகிறார். தனது வரலாற்றை திரித்து சொல்லும் ஒரு மடத்திற்கு என்ன பாரம்பரியம், புடலங்காய்? தீண்டாமையை பிறப்புரிமை போல கருதிய, மகாத்மா காந்தியை சந்திக்க மறுத்த, விதவையான இந்திரா கந்தியிடம் திரைக்கு அப்பாலிருந்து பேசிய, தமிழை ' நீச' மொழி என்று காலை, முற்பகல் வேளைகளில் பேச மறுத்து சம்ஸ்க்ருதம் பேசிய, ஒரு சாதாரண மடாதிபதிக்கு என்ன மாண்பு இருக்கிறது, என்ன தெய்வீகம் இருக்கிறது? ஏன்னத்தை கண்டார் 'பகுத்தறிவு பகலவன்', ஓட்டை தவிர? எல்லாமே ஒன்றுதான், எல்லாம் பரமாத்மா என்ற அத்வைத தத்துவத்திற்கே எதிரானதல்லவா அவரின் இந்த பாகுபாடான செயல்கள்?

யாராவது ஜெயேந்திரர் காஞ்சி மடத்தின் பாரம்பரியத்தை கெடுத்துவிட்டார், இதற்கு முந்தைய பெரியவரின் தெய்வீக புகழை நாசமாக்கிவிட்டார் என்று சொன்னால் எனக்கு சிரிப்புதான் வருகிறது, உங்களுக்கு?

காஞ்சி மடத்தை பற்றிய உண்மைகளை என் போன்றோருக்கு தெரியச் செய்த ஜெயேந்திரருக்கு எனது நன்றிகள்!




பி. கு : இந்த விஷயங்களை ப்ற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள, ஜெயேந்திரர் கைது நாடகத்திற்குப் பின்னர் வெளி வந்த 'டைம்ஸ் ஆப் இன்டியா' 'தி வீக்', 'அவுட்லுக்', 'ப்ரண்ட் லைன்' ஏடுகளை பாருங்கள்.