Tuesday, November 15, 2005

சோனி வழி, குறுக்கு வழி.

ரசிகர்கள் தாங்கள் வாங்கும் இசைத்தட்டுக்களை வீட்டில் பிரதியெடுப்பதை தடுக்க, சோனி நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த 'First4Internet' என்ற நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போக அது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
இசைத்தட்டுக்களை வாங்குவோர் வீட்டில் பிரதியெடுத்து நண்பர்களுக்கு கொடுப்பது 'Casual Piracy' என்று இசைத்தட்டு நிறுவனங்களால் அழைக்கப்படுகிறது. இணைய தள தரவிறக்கங்கள், P2P வலைப்பின்னல்கள் என்று பலவற்றில் இருந்து இசைத்திருட்டை பெரும்பாலும் ஒழித்துவிட்டு, தற்போது இசைத்தட்டு நிறுவனங்கள் தம் பார்வையை இந்த 'Casual Piracy' மீது திருப்பியிருக்கின்றன.

DRM எனப்படும் டிஜிட்டல் உரிமை மேலாண்மை தொழில்ழுட்பத்திற்கு இப்போது ஏக கிராக்கி. பலரும் பல விதமான நுட்பங்களை பரிசோதித்துக் கொண்டிருக்கின்றனர். தாம் விற்கும் இசைத்தட்டிலேயே DRM நுட்பத்தை நிறுவலாம் என்ற புத்திசாலித்தனமான எண்ணம் சோனிக்குத் தோன்றியது. தங்கள் DRM மென்பொருளை பயனரின் கணிணியில் நிறுவவேண்டும், ஆனால் அது பயனருக்குத் தெரியக்கூடாது. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது மேற்கூறிய 'First4Internet' நிறுவனத்தின் நுட்பம். இந்த இசைத்தட்டுக்களை கணிணியில் பாட வைக்கும்போது கணிணி பயனரிடம் எந்த அனுமதியும் பெறாமல் தன் மென்பொருளை நிறுவியது சோனி, இது முதல் தவறு. அப்படி நிறுவப்பட்ட மென்பொருள் 'Adware/Spyware/Malware' என்று பல வேர்களைக் கொண்டிருக்கும் குண்டாந்தடி நிறுவன்ங்களின் மென்பொருளைப் போல பயனர் அறியாவண்ணம் ஒளிக்கப்பட்டது. கணிணி ஹாக்கர்களின் இந்த வழிமுறையை கையாண்டு தன் மென்பொருளை நிறுவியது இரண்டாவது இமாலய குற்றம். அப்படி நிறுவிய மென்பொருளை கணிணியிலிருந்து அகற்ற எந்த வழியையும் கொடுக்காதது மூன்றாவது குற்றம். சிஸ் இன்டெர்னல்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மார்க் ரஸ்ஸிகோவிக் என்பவரெ இதை முதலில் கண்டுபிடித்தார். தன் கணிணியில் ஒரு 'ரூட்கிட்' (Rootkit, இதை இப்படித்தான் அழைக்கின்றனர்) இருப்பதைக் கண்டு திகைப்படைந்து, பின்னர் இது சோனி இசைதட்டுக்களால் வந்தது என்பதை அறிந்தார். இந்த ரூட்கிட்டுகளை கணிணியிலிருந்து அகற்றுவது மிகக் கடினம். இதை முன்னரே கண்டறிந்த 'F-Trust' என்ற நிறுவனம் சோனியை எச்சரித்தும் சோனி செவிசாய்க்கவில்லை. இது பெரும் பிரச்னையாகி பலத்த எதிர்ப்புக்கு பின்னர், சோனி மெதுவாக, இந்த மென்பொருளை அகற்ற படு சிக்கலானதொரு வழிமுறையை தெரிவித்தது. இது நான்காவது மாபெரும் குற்றம். இதற்குள்ளாக இந்த சோனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வைரஸ் எழுதுபவர்கள் புதிய வைரசையே உருவாக்கிவிட்டனர்.

இந்த ரூட்கிட் நுட்பம் உங்கள் கணிணியில் உள்ள கொப்புக்களை மறைக்க பயன்படும், சோனி தன் மென்பொருளை இது போன்ற நுட்பத்தை கொண்டே மறைத்தது. ஆனால், பிரச்னை என்னவென்றால் இந்த நுட்பம் நிறுவப்பட்டுள்ள கணினியில் சோனி மென்பொருள் நிறுவப்பட்டுள்ள இடத்தில் எதைப் போட்டாலும் அதுவும் மறைக்கப்பட்டுவிடும்; அங்கே வைரஸைப் போட்டாலும். இவ்வளவுக்குப் பின்பும், இந்த நிமிடம் வரை சோனியிடமிருந்து எந்த மன்னிப்புக் கோரலும் வரவில்லை. மாறாக, நாங்கள் இதை இசைக்கலைஞர்களின் உரிமையை காப்பாற்றவே செய்தோம் என்று மார்தட்டுகின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கிறர்களாம். சோனியின் இந்த செய்கை பலருக்கும் கடும் எரிச்சலை எற்படுத்தியுள்ளது. இந்த 'ரூட்கிட்' கொண்ட இசைத்தட்டுகளை சோனி திரும்பப் பெறவேண்டும், பாதிக்கப்பட்ட கணிணியிலிருந்து இதை நீக்க எளிமையான வழிமுறையை தர வேண்டும், இந்த செய்கைக்கு மன்னிப்புக் கோர வேண்டும், அதுவரை சோனியின் பொருட்களை புறக்கணிப்போம் என்று கோஷங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

பல ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்களும், மைக்ரோசாப்டும் சோனியின் இந்த மென்பொருளை 'மால்வேர்' என்று அறிவித்து, தங்கள் மென்பொருட்கள் அதை நீக்கும் என்று அறிவித்துவிட்டன. ஐ-ட்யூன்ஸின் பெருவெற்றியால் கலங்கிப் போய் 'எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்று அலைந்து கொண்டிருக்கும் இசைத்தட்டு நிறுவனங்கள் காசு கொடுத்து இசைத்தட்டு வாங்குவோரை இது போல் திருடர்களைப் போல் நடத்துவது சரியான கொடுமை. ஒரிஜினல் இசைத்தட்டு வாங்கினால் வைரஸ் தாக்கும் அபாயம் உண்டென்றால் அதற்கு திருடிவிட்டே போகலாம் என்று எண்ண வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

17 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல பதிவு சுதர்சன்.

-மதி

ஜெகதீஸ்வரன் said...

ippadiyum unda... arumaiyana thakaval..

யாத்ரீகன் said...

ஓ !! இவ்ளோ விஷயங்கள் நடக்குதா..

அருமையான, கடினமான தகவல்களை எளிய நடையில் கொடுத்துருக்கீங்க.. நன்றி..

-
செந்தில்/Senthil

மணியன் said...

இன்றைக்குத்தான் காலை தினசரியில் இதைப் பற்றி செய்தி படித்தேன். உடனே உங்கள் பதிவு பிரச்சினையை அழகாக விளக்கியது.நல்ல பதிவு.நன்றி

பினாத்தல் சுரேஷ் said...

Thanks sudharsan, for telling it in a way that even I can understand!

Unknown said...

நல்ல பதிவு சுதர்சன்.

Sundar Padmanaban said...

எளிய கணிணியாக இருந்ததை 'வளர்ச்சி' என்ற பெயரில் மென்பொருள் மென்பொருளாக நூற்றுக்கணக்கில் போட்டு 'கனம்' கொண்டதாகச் செய்துவிட்டார்கள்.

இதில் இந்த மாதிரி ரூட்கிட் தொல்லை வேறு. கண்களைத் திறந்து திரையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சந்தடியில்லாது மென்பொருளை நிறுவும் இச்செயலை எதிர்த்துச் சட்ட ரீதியாக யாரும் வழக்கு தொடரவில்லையா?

சலிப்பூட்டும் எரிச்சலடையச் செய்யும் தொழில் நுட்பங்களில் இதுவும் ஒன்று.

வானம்பாடி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

சுந்தர்,

சோனியின் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் சோனியின் பதில் 'எல்லம் EULAவில் இருக்கு' என்பது. இந்த EULA எனப்படும் 'End User License Agreement' ஒரு பெரும் கொடுமை. EULAவில் 3000, 4000 வார்த்தைகள் இருக்கும் இதை படித்து புரிந்து கொண்டு 'ஓகே' சொல்ல அட்லீஸ்ட் முதலாண்டு B.L வரையாவது படித்திருக்க வேண்டும். இந்த EULA கொடுமைகளை ஒரு தனி பதிவாகவே போடலாம் என்றிருக்கிறேன்.

rv said...

சுதர்ஸன்,
நல்ல பதிவு. class action suit போட்டுருக்காங்கன்னு படிச்சதா நினைவு.. சோனி செஞ்சது திருட்டுத்தனமே தான்..

//EULA//
அய்யோ.. அந்தக் கொடுமை தாங்க முடியாதது. எல்லாருக்கும் புரியறா மாதிரி creative commons ஸ்டைல்ல போட்டா என்ன பிரச்சனை அவங்களுக்கு?

தாணு said...

உடற்கூறை விட மென்பொருள் கூறு புரிந்துகொள்ள ரொம்ப சிக்கலா இருக்குது.

வானம்பாடி said...

இராமநாதன், எல்லாருக்கும் புரியறா மாதிரி போட்டா அப்புறம் எப்படி இந்த மாதிரி 'தகுடுதத்தம்' எல்லாம் பண்றது? :)

தாணு, உடற்கூறோடெல்லாம் மென்பொருளை ஒப்பிடவே முடியாது. உடற்கூறு ரொம்பவே சிக்கலானது, அதன் முன் மென்பொருள் சும்மா ஜுஜுபி. :)

இளங்கோ-டிசே said...

சுதர்சன், நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. பதிவுக்கு நன்றி.
....
இங்கேயும், ஏதோ ஒரு bandன் இசைததட்டை இப்படி பிரதி எடுக்க முடியாதவாறு செய்து விற்று (வாங்கியவர்களுக்கு முற்கூட்டியே தெரிவிக்காமல்) ஒரு பிரச்சனை எழுந்ததை எங்கையோ வாசிதது நினைவில் உண்டு.

Boston Bala said...

---ஒரிஜினல் இசைத்தட்டு வாங்கினால் வைரஸ் தாக்கும் அபாயம் உண்டென்றால் அதற்கு திருடிவிட்டே போகலாம் ---

அது :-))

(இந்த இரண்டு எழுத்தை தட்டச்ச, எரிதம் தடுப்புக்காக நான் அடித்த வார்த்தை: enhwiedi)

பின்னூட்ட எரிதத்தினால் வார்த்தை மெய்ப்பு நுட்பம் வந்திருக்கிறது. திருட்டு விசிடி பார்த்தால் 100-ஓ அல்லது 911-ஓ கூப்பிடும் நுட்பம் வந்தால் தவறா ;;-)

இராதாகிருஷ்ணன் said...

கடைசியாச் சொன்னீங்களே அது நல்லாத்தான் இருக்கு :)
இந்த மகாப் பெரிய நிறுவனங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

வானம்பாடி said...

பா.பா,
எரிதத் தடுப்பு 6 எழுத்துக்களிலிருந்து 8 ஆகி இருப்பது எரிச்சலாகத்தானிருக்கிறது. ஆனால் என்ன செய்ய, வெள்ளைக்கார துரைகளும், துரைசானிகளும் விடுவேனா பார் என்கிறார்கள்.

911-ஐ கூப்பிடும் நுட்பமா? ஆங்கிலப் பதிவில் எழுதி விடப் போகிறீர்கள், யாராவது படித்து செயல்படுத்திவிடப் போகிறார்கள். ;-)

Anonymous said...

அட்டகாசமாக புரியும் படி எழுதி இருக்கிறீர்கள். உங்கள் நடை மிகவும் பிடித்து இருக்கிறது.

வானம்பாடி said...

நன்றி டுபுக்கு. (இப்படி சொல்ல ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது :) )