Tuesday, October 18, 2005

செய்தித்தாளுக்கு வயது 400!

செய்தித்தாளுக்கு வயது 400!

1605ம் வருடத்திலேயெ உலகின் முதல் செய்தித்தாள் அச்சிடப்பட்டுவிட்டது. முதலில் அச்சிட்டது யார் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆப்ரகாம் வெர்ஹூவன் என்பவர் 1605-ல் பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆன்ட்வெர்ப் நகரில் தொடங்கிய 'நியூ டெய்டிங்கென்' (Nieuwe Tijdingen) என்ற செய்தித்தாளே உலகின் முதல் செய்தி ஏடு என்று கருதப்படுகிறது. டச்சு மொழியில் வெளியிடப்பட்ட இந்த ஏட்டின் பிரதிகள் நமக்கு 1621 ஆண்டு முதல்தான் கிடைத்துள்ளன. அதற்கு முன்னர் வந்த பதிப்புகள் கிடைக்கவில்லை.

யோஹான் கரோலஸ் என்பவரும் 1605ம் ஆண்டில் ஒரு செய்தியேட்டை வெளியிடத் தொடங்கினார். அதன் பெயர் "Relation aller fürnemmen und gedenckwürdigen Historien". ஜெர்மன் மொழியில் அமைந்த இந்த ஏடு அன்றைய ரோமப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த 'ஸ்ட்ராஸ்பர்க்' நகரில் இருந்து வெளிவந்தது (ஸ்ட்ராஸ்பர்க் நகர் தற்போது ஃபிரான்சில் இருக்கிறது). இதை அவர் 1605ம் அண்டில் அச்சிடவில்லை; கையால் எழுதி விற்று வந்தார், 1609ல் தான் அச்சிடத் தொடங்கினார் என்றும் கூறுகிறார்கள். 1609ம் ஆண்டில் ஹெய்ன்ரிக் ஜூலியஸ் என்பவரும் 'Avisa Relation oder Zeitung' என்ற ஜெர்மன் மொழி செய்தி ஏட்டை தொடங்கியதாக நம்பப்படுகிறது.

400 ஆண்டுகளாக பல இன்னல்களையும் அடக்குமுறைகளையும் தாண்டி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பல ஊடகங்களின் வளர்ச்சியையும் மீறி செய்தி ஏடுகள் இன்று அடைந்திருக்கும் இடம் சாமான்யமானதில்லை. செய்தியை நுகர ஆயிரம் வழிகள் இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்திலும் அச்சிடப்படும் செய்தித் தாள்களின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருப்பது இன்னும் ஆச்சரியம்.

செய்தித்தாள் வாங்குவதில் முதல் 5 இடங்களில் உள்ள புள்ளிகளும் விவரங்களும்:

1. சீனா - 9.35 கோடி
2. இந்தியா - 7.88 கோடி
3. ஜப்பான் - 7.05 கோடி
4. அமெரிக்கா - 4.83 கோடி
5. ஜெர்மனி - 2.21 கோடி


நம்ம 'டமிள் முரசு' வந்தப்புறம் இந்தியாவோட செய்தியேடு விற்பனை இன்னும் 1 கோடி கூடியிருக்காது? ;-)

0 comments: