Wednesday, June 15, 2005

ழ.

மதிய உணவு நேரத்தில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது மழை வந்தது. 'டேய் என்னடா திடீர்னு மளை வருது' என்றான் ஒருவன். இன்னொருவனும் 'ஆமாம் இப்போ போய் மளை வருதே..' என்று ஆச்சரியப்பட்டான். நான், 'அது மளை இல்லடா, மழை' என்றேன். 'இவனுக்கு இதே வேலைதான், நாங்க சரியாத்தான் சொல்லுறோம்' என்று என்னை திட்டி விட்டு அவர்கள் மீண்டும் 'மளை'யைப் பற்றி பேச ஆர்மபித்து விட்டார்கள். எனக்கோ சரியான எரிச்சல்.

'டேய், தமிழ்ல எத்தனை 'la'?' என்றேன். "மூணு" என்றனர் இருவரும் ஒரே நேரத்தில். நான் அதிர்ந்து போய் விட்டென், நமக்குத் தெரியாமல் தமிழில் இன்னொரு 'ல' இருக்கிறதாவென. அது என்ன என்றபோது, 'ல, ள, ள' என்றனர். மேலும் கடுப்பான நான், 'எழுதி காட்டுங்கடா' என்றேன். ல, ள, ழ என்று எழுதி காட்டி 'தோ, இது தான் மூணாவது 'ல' என்று 'ழ'வைக் காட்டினர். 'உங்களுக்கு இப்பிடித்தான் பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுத்தாங்களா' என்றால் 'ஆமாம், இப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்க' என்று ஆணித்தரமாக கூறினர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள்தான் என்றில்லை பழைய தஞ்சை, தென்னாற்காடு, வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரும்பாலானோருக்கு 'ழ' வருவதில்லை. தமிழ் 'தமிள்' தான், மழை 'மளை' தான். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. இத்தனை நாளும் இவர்கள் தவறாக உச்சரிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன், இப்போதுதான் தெரிகிறது இவர்கள் தாம் உச்சரிப்பது சரி என்று நினைத்துதான் உச்சரிக்கிறார்கள் என்று.
இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் 'ழ'வை சரியாக உச்சரிக்க முடிந்தும் அதை 'ள' என்று உச்சரிப்பதை 'ஃபேஷனாக' சிலர் நினைக்கின்றனர்.

நான் மேலே சொன்ன வகையினர் 'ழ' வரவே வராத வகை. ஆனால், நான் நேற்று ஈழத்து கொக்குவில்லைச் சேர்ந்த நண்பர் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழை 'தமிழ்' என்று சரியாக உச்சரிக்கிறார், ஆனால் 'வாழைப்பழம்' அவருக்கும் 'வாளைப்பளம்' தான். நீங்கள் சரியாக உச்சரிக்கவில்லை என்று அவருக்கு விளக்க மிகவும் சிரமப்பட்டேன். நான் சொல்வது சரிதானோ என்று அவர் இப்போதுதான் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார், இன்னும் ஒத்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் 'ல' மற்றும் 'ள' வை மிகத் தெளிவாக வேறுபடுத்தி உச்சரிப்பவர் அவர்.


எங்கே பிரச்னை? நான் தான் தவறாக உச்சரித்துக் கொண்டிருக்கிறேனோ...

5 comments:

அல்வாசிட்டி.விஜய் said...

அய்யோ அடிக்காதிங்கண்ணா... எனக்கும் 'ழ' பிரச்சனை. :-)))

வீ. எம் said...

சுதர்சன்,
ரொம்ப நல்ல பதிவு, அளகாக சொல்லி இருந்தீர்.. மகிள்ச்சி ! :) ஹ ஹ ஹ ..அடிகாதீங்க... சும்மா விளையாட்டுக்கு.,.,எனக்கு 'ழ' உச்சரிப்பு நன்றாக வரும்..

பலருக்கு "ழ" சொல்லக்கூடாதுனு இல்லை... ஆனால் உச்சரிப்பு வருவதில்லை.. சிறு வயதில் இருந்தே பழகி இருக்க மாட்டார்கள்..

இங்கே பாருங்க.

ஒரு பையன் வகுப்புக்கு தாமதமா வந்தான் தமிழ் வாத்தியார் என்ன காரணம்னு கேட்டார்... பையன் சொன்னான் "வர வளில வாலைபளம் தோல் வளுக்கி கீளே விலுந்துட்டேன்"
கடுப்பான ஆசிரியர் எவ்வளவோ சொல்லி பார்த்தார் .. பையன் சரியாவே சொல்லலை..
அவங்க அப்பாவை வர சொல்லி பேசினார், அவர் எல்லாத்தையும் கேட்டுட்டு கோவத்துல பையனை திட்டினார்
"ஏன்டா சின்ன கொள்ந்தையா நீ? இதை கூட ஒலுங்கா சொல்ல தெரியாதா...."
வாத்தியாரை பார்த்து சொன்னார் "ஐயா இப்போ மன்னிச்சுடுங்க.. போக போக பளகிக்குவான்.."

இது எப்படி இருக்கு??

வீ .எம்

சுந்தரவடிவேல் said...

ந, ன, ண மற்றும் ர, றவுக்குமான வித்தியாசத்தையும் நாம் பேச்சில் பெரிதுபடுத்துவதில்லை.

மு. சுந்தரமூர்த்தி said...

//பழைய தஞ்சை, தென்னாற்காடு, வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரும்பாலானோருக்கு 'ழ' வருவதில்லை//

சுதர்சன்,
நம்ம ஊரப்பத்தி கேக்க பெருமையாத்தான் இருக்குது. ஆனா 'ழ' 'ய' ஆகறத மறந்துட்டிங்க போல.

வாயப்பயந்தோலு வயிக்கி கொய்ந்த கீய உய்ந்துட்சி :-)

சுதர்சன் said...

விஜய்,

நான் ஏனுங்கண்ணா அடிக்கப் போறேன். என் வருத்தம் 'ழ'வை 'ள' என்று உச்சரிப்பதுதான் சரின்னு சொல்றவங்களைப் பத்திதான்.

வீ.எம், நன்றி, நல்ல கதை. :)

சுந்தரவடிவேல், நீங்கள் சொல்வது சரிதான். எனக்கும் கூட இந்த உச்சரிப்பு வேறுபாடுகள் சரியாக வருமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் 'ழ' என்பதை தமிழின் சிறப்பு ஒலி வடிவமாகச் சொல்லிப் பெருமைப்படுகிறோம். அதைக் கூட சரியாக உச்சரிக்கவில்லை என்றால் எப்படி?

சுந்தரமூர்த்தி, பட்டியலில் வ்டாற்காட்டைப் போடும்போதே நினைத்தேன் இவர்களுக்கு 'ழ' 'ய' வாகிவிடுமே என்று, சரியாகப் பிடித்துவிட்டீர்கள்!. செங்கல்பட்டு மேலும் இப்போது சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் தென்னாற்காட்டில் நிலைமை தலைகீழ். ஒரு சில இடங்களில் 'ய' 'ழ'வாகிவிடும். எடுத்துக்காட்டாக 'மயக்கம்' மழக்கமாகி விடும். 'இறங்கிக்கோ' என்பதை 'இழிஞ்சிக்கோ' எனவும் சில கிராமங்களில் சொல்வதுண்டு. :-)