Thursday, June 30, 2005

மாபெரும் புத்தக தரவுத்தளம் - கூகிள் பிரிண்ட்

கூகிள் மீண்டும் ஒரு சேவையை சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் பிரிண்ட் எனும் இந்த சேவை ஒரு மாபெரும் புத்தக தரவுத்தளம். இதில் வித்தியாசம் என்னவென்றல் நீங்கள் இந்த புத்தகங்களின் பக்கங்களையும் படிக்கலாம். பக்கங்கள் ஒளியுணரப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 'Tamil' என்று நீங்கள் கூகிள் பிரிண்டில் தேடினால் 29,000 முடிவுகள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் தமிழ் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள். பல புத்தகங்களின் பக்கங்கள் முழுமையாகவும், சிலவற்றில் சில பக்கங்கள் மட்டுமும், சிலவற்றில் அறிமுகப்பகுதி, உள்ளடக்கம் மட்டும் கிடைக்கின்றன.

எல்லா புத்தகங்களுக்கும் யார் பதிப்பாளர், வலையில் எங்கே கிடைக்கும் போன்ற தகவல்களும் கொடுக்கப்படுகிறது.

வெங்கட் தமிழ் புத்தக தரவுத் தளம் அமைக்கும் திட்டம் பற்றி பதிவிட்டிருந்தார். அந்த தரவுத்தளம் அமைக்கப்படும் வரையில் இந்த கூகிள் தரவுத்தளத்திற்கு நாம் தரவுகளை வழங்கலாமே?

கூகிளின் தரவுகள், பதிப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்படுவதாகத் தெரிகிறது. பதிப்பாளர் பத்ரி, பதிப்பாளர்களொடு தொடர்புடைய ஹரன் பிரசன்னா போன்றோர் கூகிளை இது குறித்து தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.

இதற்கிடையில் நம்முடைய தரவுத்தள முயற்சியும் தொடரப்பட வேண்டும். ஒரு தரவுத்தளம் எந்த தனி நபர் சாராததாகவும், இன்னொன்று கூகிள் போன்ற மாபெரும் வலை நிறுவனத்தின் வீச்சை பயன்படுத்துவதாகவும் இருப்பது நல்லதுதானே..

Wednesday, June 29, 2005

இட ஒதுக்கீடு தேவையா? - அல்வா சிட்டி ஷம்மிக்கு பதில்.

கிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர். இது போல அதிகம் முன்வைக்கப்ப்டும் மற்றொரு முறை 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு'. இதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. வருமானத்தை குறைத்து ஒரு சான்றிதழ் வாங்கினால் போதும், உள்ளே நுழைந்து விடலாம்.

இட ஒதுக்கீடு என்பது சமூக சம நிலைக்காக உருவாக்கப்பட்டது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து விடலாம், ஏழை
பனக்காரனாகிவிடலாம், ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா? அவர்களுக்கும் சம உரிமை வேண்டும், சமமான போட்டிக்களம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இட ஒதுக்கீடு (கொள்கை அளவில்).

சில ஓட்டைகள் இருந்தாலும் இப்போதுள்ள முறை சிறந்த முறையே. இதில் களைய வேண்டிய குறைகள் நிறைய உள்ளன.
1. இந்த முறையிலேயெ கிராமப்புறம், நகரம் என்று உள்-ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
2. BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
3. ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.

அல்வா சிட்டி ஷம்மியின் இந்த பதிவிற்கான பதில் இது.

சின்னஞ்சிறு பூமி - கூகிள் எர்த்

கூகிளின் மற்றொரு புதிய சேவை 'Google Earth'. இந்த சின்னஞ்சிறு உலகை ஒரு முப்பரிமாண (3D) வரைபடமாக காட்டுகிறது. உலகின் எந்த மூலையை வேண்டுமானாலும் அங்குள்ள கட்டிடங்கள் முதற்கொண்டு காட்டுகிறது. ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நாமே பறப்பது போன்ற ஒரு தோற்றம் தருகிறது. பல்லாவரத்திலிருந்து பாஸ்டன் பயண நேரம் பத்து வினாடிக்கும் குறைவு தான்.

கூகிள் எர்த் சேவையை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். அகலப் பாட்டை வலையும் நல்ல முப்பரிமாண Graphics Processor-ம் அவசியம். மேல் விவரங்களுக்கு -> http://earth.google.com

கீழே தெரிவது நம்ம சென்னை (அம்)மாநகரம்தான்.

சென்னை (அம்)மாநகரம்

Wednesday, June 15, 2005

ழ.

மதிய உணவு நேரத்தில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது மழை வந்தது. 'டேய் என்னடா திடீர்னு மளை வருது' என்றான் ஒருவன். இன்னொருவனும் 'ஆமாம் இப்போ போய் மளை வருதே..' என்று ஆச்சரியப்பட்டான். நான், 'அது மளை இல்லடா, மழை' என்றேன். 'இவனுக்கு இதே வேலைதான், நாங்க சரியாத்தான் சொல்லுறோம்' என்று என்னை திட்டி விட்டு அவர்கள் மீண்டும் 'மளை'யைப் பற்றி பேச ஆர்மபித்து விட்டார்கள். எனக்கோ சரியான எரிச்சல்.

'டேய், தமிழ்ல எத்தனை 'la'?' என்றேன். "மூணு" என்றனர் இருவரும் ஒரே நேரத்தில். நான் அதிர்ந்து போய் விட்டென், நமக்குத் தெரியாமல் தமிழில் இன்னொரு 'ல' இருக்கிறதாவென. அது என்ன என்றபோது, 'ல, ள, ள' என்றனர். மேலும் கடுப்பான நான், 'எழுதி காட்டுங்கடா' என்றேன். ல, ள, ழ என்று எழுதி காட்டி 'தோ, இது தான் மூணாவது 'ல' என்று 'ழ'வைக் காட்டினர். 'உங்களுக்கு இப்பிடித்தான் பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுத்தாங்களா' என்றால் 'ஆமாம், இப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்க' என்று ஆணித்தரமாக கூறினர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள்தான் என்றில்லை பழைய தஞ்சை, தென்னாற்காடு, வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரும்பாலானோருக்கு 'ழ' வருவதில்லை. தமிழ் 'தமிள்' தான், மழை 'மளை' தான். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. இத்தனை நாளும் இவர்கள் தவறாக உச்சரிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன், இப்போதுதான் தெரிகிறது இவர்கள் தாம் உச்சரிப்பது சரி என்று நினைத்துதான் உச்சரிக்கிறார்கள் என்று.
இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் 'ழ'வை சரியாக உச்சரிக்க முடிந்தும் அதை 'ள' என்று உச்சரிப்பதை 'ஃபேஷனாக' சிலர் நினைக்கின்றனர்.

நான் மேலே சொன்ன வகையினர் 'ழ' வரவே வராத வகை. ஆனால், நான் நேற்று ஈழத்து கொக்குவில்லைச் சேர்ந்த நண்பர் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழை 'தமிழ்' என்று சரியாக உச்சரிக்கிறார், ஆனால் 'வாழைப்பழம்' அவருக்கும் 'வாளைப்பளம்' தான். நீங்கள் சரியாக உச்சரிக்கவில்லை என்று அவருக்கு விளக்க மிகவும் சிரமப்பட்டேன். நான் சொல்வது சரிதானோ என்று அவர் இப்போதுதான் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார், இன்னும் ஒத்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் 'ல' மற்றும் 'ள' வை மிகத் தெளிவாக வேறுபடுத்தி உச்சரிப்பவர் அவர்.


எங்கே பிரச்னை? நான் தான் தவறாக உச்சரித்துக் கொண்டிருக்கிறேனோ...

Tuesday, June 07, 2005

கிராமப்புற மாணவர்களுக்கு நீண்டகால நலன்..?

கிராமப்புற மானவர்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டிலேயே உள் ஒதுக்கீட்டு முறை சில காலத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்டது, அது இப்போது இருக்கிறதாவென்று தெரியவில்லை. நுழைவுத் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டலும் இந்த ஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போதும், கிராமப்புற மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை, வேண்டுமானால் பொள்ளாச்சி, ராசிபுரம் போன்ற சிறு நகர மாணவர்கள் இந்த ரத்தால் அதிகம் பயன் பெறக் கூடும்.

ஒருவேளை நமது பாடத்திட்டங்களும் தேர்வு முறைகளும் உருப்போடுவதை ஆதரிக்காமல் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் மாற்றப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது நகரங்களில் அதற்கென்று 'கோச்சிங் சென்டர்'கள் முளைக்கும், நகர மாணவர்கள் அதற்கு உடனடியாக தயார்படுத்தப்படுவார்கள், மீண்டும் கிராமப்புற மாணவர்கள் சரியான ஆசிரியர்களும் வசதியும் இல்லாமல் அவதிப்படுவார்கள். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சியும், ஊக்கமும், வசதியும், தேர்வு முடிவுகளுக்கு பொறுப்பேற்க வைக்கும் 'accountability'-யும் கொடுப்பதுதான் நீண்டகால அடிப்படையில் பயன் தரும், எந்த கொள்கை மாற்றமும் அவர்களை பாதிக்காதபடி காக்கும்.

அண்ணா பல்கலை, என்.ஐ.டி திருச்சி (முன்னாள் ஆர்.இ.சி) போன்றவற்றின் பிம்பங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. ஐ.ஐ.டி-க்களின் பிம்பங்களைப் பாருங்கள், அரசின் தலையீடு இல்லாததாலேயே அவை நீடித்திருக்கின்றான, உலகளவில் போற்றப்படுகின்றன. அவற்றிற்கு ஈடாக இல்லாவிட்டாலும் மாநில அளவிலும் இப்படிப்பட்ட பிம்ப உருவாக்கல் அவசியமே. நாளொரு கொள்கையும் பொழுதொரு முடிவுமாக எடுத்து அவற்றின் நம்பகத்தன்மையை குறைத்து விடக் கூடாது.

ஷங்கரின் பதிவில் பின்னூட்டமிடப்போய் சற்று நீண்டு விட்டதால் இந்த தனிப்பதிவு.

Monday, June 06, 2005

தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகள் ரத்து - சரியா?

தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகளும் மாணவர்களும் படும்பாடு சொல்லி மாளாது. முதலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருந்தது, பின்னர் நுழைவுத் தேர்வுகளை நுழைத்து அதில் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் பள்ளி இறுதித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து கணக்கிட்டார்கள். இது கொஞ்ச காலம் ஒழுங்காக போய்க் கொண்டிருந்தது. பின்னர் சில பலம் படைத்த கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை 'வாங்கி'னார்கள். இங்கே ஆரம்பித்தது சனி; இகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை வாங்கிய கையோடு உச்ச நீதிமன்றத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து விடுதலையும் வாங்கி ஆளுக்கொரு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை பெரும் பாடு படுத்தி கொண்டிருந்தார்கள். இப்போது அரசு நடத்தும் நுழைவுத் தேர்வையும் நிறுத்தி மீண்டும் சுழியிலிருந்து தொடங்கி இருக்கிறார்கள்.

கல்வி போன்ற மிக அடிப்படையான விஷயங்களில் கூட இன்னும் ஒரு நிரந்தரமான கொள்கை இல்லை நம் அரசுகளுக்கு. எல்லாமே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' தான். ஒரு மணி நேரத்துக்கு 10 விடைத்தாள் என்ற லட்சிய நோக்கொடு விடைத்தாள் திருத்துபவர்கள் நம் ஆசிரியப் பெருமக்கள். இந்தத் தேர்வு முடிவுகளை மட்டுமே நம்பி மாணவர் சேர்க்கை என்பது, மாணவர்களின் எதிர்காலக் கல்வியை சூதாட்டமாக்குவதாகவே அமையும். 'இதுதான் கொள்கை, இனி இப்படித்தான் இருக்கும்' என்று எந்த முடிவுமே இருக்காதா... இப்படிப்பட்ட ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் முன் யாரை கலந்தாலோசித்தது அரசு? மாணவர்களையா, ஆசிரியர்களையா, கல்லூரி நிர்வாகிகளையா, பெற்றொர்-ஆசிரியர் கழகங்களையா..? இன்னும் எத்தனை காலத்துக்கு சேர் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் அறியாத சிந்தனாவாதி இ.ஆ.ப அலுவலர்களே இப்படி முடிவெடுத்துக் கொண்டிருப்பர்?