சென்னை மாநகராப் பேருந்தில் நின்று கொண்டு வெளியே 'பராக்கு' பார்த்தபடி பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் இருந்த ஒரே வாசகம், 'தினமலர் - உண்மையின் உரைகல்'. நல்லதொரு 'oxymoron' வாசகத்தை கண்ட மகிழ்ச்சி எனக்கு. 'தினமலர் - உண்மைக்கு உறை போட்டு அதன் மேலே மூடி வைக்கும் கல்' என்று இருந்திருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்..
Monday, January 31, 2005
ஜெயகாந்தன் -> (ஜெயேந்திரதாசன்)?
Posted by வானம்பாடி at 12:06 AM 7 comments
Tuesday, January 25, 2005
2 கோடி ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவிகள்
ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவி 1.0 பதிப்பு இரண்டு கோடி பிரதிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது, அதுவும் வெறும் 76 நாட்களில். லினக்ஸிற்கு அடுத்து ஓபன் ஸோர்ஸின் மிக முக்கிய வெற்றி ஃபயர்ஃபாக்ஸ் என்றே கருதுகிறேன். மைக்ரோசாப்டை சற்றே கவலை கொள்ள வைப்பவைகளின் பட்டியலில் ஃபயர்ஃபாக்ஸ் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது.
February 16, 2005:
வெறும் 99 நாட்களில் 25 மில்லியன் (2.5 கோடி) என்ற இலக்கை ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவி எட்டியிருக்கிறது.
Posted by வானம்பாடி at 6:15 AM 4 comments
Monday, January 24, 2005
அரசியலில் 'மட' அதிபதிகளா?
திண்ணையில் வெளியான இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. http://www.thinnai.com/pl0113058.html. அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டேன், இப்படி எல்லாம் கூட மக்கள் சிந்திக்கிறார்களா என்ன! ஜெயேந்திரரை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கிறராம் இவர், யாரைய்யா இந்த வரதன்?. எப்பொழுது இது போன்ற 'அரிய' கருத்தை வெளியிட நேரம் கிடைக்கும் என்று காத்துக் கிடந்திருக்கிறார் போலும்.
சாதியாதிக்க வெறியும், மத வெறியும் கொண்ட ஒரு மடாதிபதி அரசியல் தலைவரா? இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களான சமத்துவமும் மதச்சார்பின்மையும் சுத்தமாக நீர்த்துப் போய் விட்டனவா? ஒரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஒரு கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்கும் முன் கொண்டு போய் கோவிலில் சமர்ப்பித்து, வழக்கு கடவுளுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே நடப்பதாக கூறுகிறார். பின்னே இவரும், நீதிபதியும், அரசும் எதற்கு? இங்கே ஒருவர் அந்த குற்றம் சாட்டப்பட்டவரிடம் தலைமை பண்புக்கான இலக்கணங்களை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடுத்து அவரை நாடாள அழைக்கிறார். 'நெஞ்சு பொறுக்குதில்லையே...' என்ற மகாகவியின் பாடல் நினைவுக்கு வந்தாலும், இந்த மாந்தர்களின் நிலை அதை விடப் படு மோசமாக கெட்டிருப்பதால் வேறு வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்...
Posted by வானம்பாடி at 11:55 PM 8 comments
பிணந்தின்னிகள்
சுனாமி பேரழிவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பிணந்தின்னிகளின் வரிசையில் இப்போது மதம் மாற்றும் கும்பலும் சேர்ந்து விட்டனர். ரீடிப் செய்தியின் சுட்டி http://www.rediff.com/news/2005/jan/24shoba.htm
ஏற்கனெவே தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை 90% கிறிஸ்தவர்களாக மாற்றியாகிவிட்டது. இப்பொழுது கடலூர், நாகை மாவட்டங்களில் சுனாமியால் துயரடைந்தவர்களின் குழம்பிய மனக்குட்டையில் மத மாற்ற மீன் பிடிக்க முயலுகிறது இந்த கும்பல்.
Posted by வானம்பாடி at 3:28 AM 2 comments
Sunday, January 09, 2005
சென்னை புத்தகக் கண்(கொள்ளாக்)காட்சி
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன் நேற்று. மூன்று ஆன்டுகளுக்கு முன்னர் நான் முதல் முறையாக சென்ற போது புழுதிப் படலத்தில் சிக்கி தலைவலியோடு வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த ஆண்டுகளில் கீழே கம்பளம் விரித்து காப்பாற்றினார்கள். ஆனாலும் சிறிய கடைகளுக்குள் புகுந்து நிதானமாகப் பார்த்து வாங்க முடியாத அளவு கூட்டமிருந்தது அல்லது கடைகள் சிறியதாக இருந்தது. இம்முறை பெரும் மாறுதல், அகலமான நடைபாதைகள், பெரிய ஒரே அளவிலான கடைகள், மிதமான கூட்டம் என்று. ஒரு சில கடைகளைத் தவிர மற்றவற்றில் நிதானமாகப் பார்த்து வாங்க முடிந்தது.
இம்முறையும் கை கொள்ளாத அளவு புத்தகங்கள் வாங்கினேன். இனிமேலும் எதையும் தூக்கிச் செல்ல முடியாது என்ற நிலையில் அரை மனதோடு வெளியெறினேன். நான் வாங்கிய புத்தகங்கள் இவையே.
ஜெயகாந்தன் - ஹர ஹர சங்கர
சுந்தர ராமசாமி - ஒரு புளியமரத்தின் கதை.
எஸ். ராமகிருஷ்ணன் - உப பாண்டவம்
ஜெயமோகன் - திசைகளின் நடுவே, சங்க சித்திரங்கள்
கல்கி - யார் இந்த மனிதர்கள்?, புஷ்பப் பல்லக்கு, அதிர்ஷ்ட கவசம்
தேவன் - ராஜத்தின் மனோரதம்
சுஜாதா - ஸீரங்கத்துக் கதைகள். (சென்ற முறை வாங்கியதை யாரோ சுட்டு விட்டார்கள்)
சின்னக் குத்தூசி - எத்தனை மனிதர்கள்
ஜே. கிருஷ்ணமூர்த்தி - அறிந்தனின்றும் விடுதலை
ஐதரேய உபநிஷதம், பஜகோவிந்தம், திருப்பாவை, பகவத்கீதை - ராமகிருஷ்ண மடம்
சுகி. சிவம் - மனசே! நீ ஒரு மந்திரச் சாவி
எங்கல்ஸ் - மார்க்ஸின் மூலதனம் பற்றி
லெனின் - ஒரு வரலாறு
லெனின் - புரட்சி பற்றி
பாரதியார் கதைகள் - வர்த்தமானன் பதிப்பகம்
நேரம் கிடைத்தால் திரும்பவும் செல்லலாம் என்றிருக்கிறேன், பார்ப்போம்.
Posted by வானம்பாடி at 8:40 PM 1 comments
Monday, January 03, 2005
கடல் கொண்ட கடலூர்
சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த கடலூர் நகர கடலோரப் பகுதிக்கு சென்றிருந்தேன். 6 நாட்கள் கழித்து சென்றதால் சுனாமியின் முழு சீற்றத்தை என்னால் உணர முடியவில்லை. நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்கள் சமுதாயக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனனர். கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து உதவிகள் குவிகின்றன. நகரெங்கும் உதவிப் பொருட்கள் மற்றும் தன்னார்வலர்களை ஏற்றிக் கொண்டு வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் திரிந்து கொன்டிருக்கின்றன. மாநில, மத்திய அமைச்சர்கள் தம் படைகள் புடை சூழ சுற்றிச் சுற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கரையோர கிராமத்தில் கண்ட காட்சிகள் நெகிழ வைத்தன. ரிஷிகேஷில் இருந்து வந்திருக்கும் ஒரு தமிழ் தெரியாத சாமியாரின் தேறுதல் மொழிகள், அதை தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் விளக்கும் ஒரு ஆர்வலர், இவர்களோடு வந்திருந்த நடிகர் விவேக் ஓபராய், சேதக் குப்பைகளை அப்புறப்படுத்தும் ராணுவ வீரர்கள், தன் திருமண வயது மகளை கடல் கொண்டு போன சோகத்தை யாரோ ஒரு தன்னார்வலர் குழுவிடம் விளக்கிக் கொண்டிருக்கும் ஒரு தாய், அதை பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தப்பிப் பிழைத்த பெண்கள், எங்கெங்கிருந்தோ வந்து தங்களால் முடிந்த சேவைகளை செய்து கொன்டிருக்கும் மக்கள், பல வகைப்பட்ட ஊடகங்களின் செய்தி சேகரிப்பாளர்கள், தன் நகைகளை நிச்சயமாக கடல் கொண்டு போயிருக்காது, யாரோ திருடிக் கொண்டு தான் போயிருக்க வேண்டும் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெண், அதை கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் (அரசு அலுவலர்?), 'ஏ தமிழ்ச் செல்வி, நம்ம தெருவைப் பத்தி எதுனா சொல்லு, நமக்கு எதுனா கெடைக்குமில்லே' என்று ஒரு பெண்ணின் குரல், என்று கலவையான காட்சிகள்.
கண்ணில் பட்ட நல்லவை:
மக்களின் மனித நேயம்: எங்கெங்கிருந்தோ வந்து மலை போல குவிந்திருக்கும் உணவு, உடை மற்றும் பிற உதவிப் பொருட்கள். தமிழகத்திற்கு அடுத்து கர்நாடகத்தில் இருந்துதான் அதிக அளவு உதவி வந்திருக்கிறது. அரசியல் கலக்காத உண்மையான அன்பு அது.
மாவட்ட ஆட்சியரின் ஆளுமை: ககன் தீப் சிங் பேடி அரசுப் பணியாளர்களையும் தன்னார்வலர்களையும் சிறப்பாக ஒருங்கிண்னைத்து நிவாரணப் பணிகளை மிகவும் விரைவுபடுத்தியுள்ளார்.
கண்ணில் பட்ட கெட்டவை:
சமூக விரோதிகள்: எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று சுனாமி சூறையாடிய வீடுகளை சமூக விரோதிகளும் சூறையாடியுள்ளனர்.மொழி தெரியாமல் வரும் தன்னார்வலர்களிடம் இதுதான் பாதிக்கப்பட்ட இடம் என்று எதையாவது காட்டி பொருட்களையும் சிலர் பறித்து விடுகின்றனர்.
வீணாகும் உதவிப் பொருட்கள்: மக்கள் பழைய துணிகளை வாங்க மறுத்து வீசி விடுகின்றனர். ஒரே மாதிரியான உணவை சாப்பிட மறுத்து வீணாக்குகின்றனர். புதிய துணி வேண்டுமாம், மீன் சோறு, பிரியாணி வேண்டுமாம், என்ன சொல்ல? இது கடலூரில் மட்டும் என்று நினைக்கிறேன். உண்மையாக நிறைய உதவி தேவைப்படும் நாகை பகுதி மக்களுக்கு இந்த பொருட்கள் போய் சேரவேண்டும்.
Posted by வானம்பாடி at 3:43 AM 3 comments