சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த கடலூர் நகர கடலோரப் பகுதிக்கு சென்றிருந்தேன். 6 நாட்கள் கழித்து சென்றதால் சுனாமியின் முழு சீற்றத்தை என்னால் உணர முடியவில்லை. நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்கள் சமுதாயக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனனர். கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து உதவிகள் குவிகின்றன. நகரெங்கும் உதவிப் பொருட்கள் மற்றும் தன்னார்வலர்களை ஏற்றிக் கொண்டு வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் திரிந்து கொன்டிருக்கின்றன. மாநில, மத்திய அமைச்சர்கள் தம் படைகள் புடை சூழ சுற்றிச் சுற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கரையோர கிராமத்தில் கண்ட காட்சிகள் நெகிழ வைத்தன. ரிஷிகேஷில் இருந்து வந்திருக்கும் ஒரு தமிழ் தெரியாத சாமியாரின் தேறுதல் மொழிகள், அதை தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் விளக்கும் ஒரு ஆர்வலர், இவர்களோடு வந்திருந்த நடிகர் விவேக் ஓபராய், சேதக் குப்பைகளை அப்புறப்படுத்தும் ராணுவ வீரர்கள், தன் திருமண வயது மகளை கடல் கொண்டு போன சோகத்தை யாரோ ஒரு தன்னார்வலர் குழுவிடம் விளக்கிக் கொண்டிருக்கும் ஒரு தாய், அதை பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தப்பிப் பிழைத்த பெண்கள், எங்கெங்கிருந்தோ வந்து தங்களால் முடிந்த சேவைகளை செய்து கொன்டிருக்கும் மக்கள், பல வகைப்பட்ட ஊடகங்களின் செய்தி சேகரிப்பாளர்கள், தன் நகைகளை நிச்சயமாக கடல் கொண்டு போயிருக்காது, யாரோ திருடிக் கொண்டு தான் போயிருக்க வேண்டும் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெண், அதை கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் (அரசு அலுவலர்?), 'ஏ தமிழ்ச் செல்வி, நம்ம தெருவைப் பத்தி எதுனா சொல்லு, நமக்கு எதுனா கெடைக்குமில்லே' என்று ஒரு பெண்ணின் குரல், என்று கலவையான காட்சிகள்.
கண்ணில் பட்ட நல்லவை:
மக்களின் மனித நேயம்: எங்கெங்கிருந்தோ வந்து மலை போல குவிந்திருக்கும் உணவு, உடை மற்றும் பிற உதவிப் பொருட்கள். தமிழகத்திற்கு அடுத்து கர்நாடகத்தில் இருந்துதான் அதிக அளவு உதவி வந்திருக்கிறது. அரசியல் கலக்காத உண்மையான அன்பு அது.
மாவட்ட ஆட்சியரின் ஆளுமை: ககன் தீப் சிங் பேடி அரசுப் பணியாளர்களையும் தன்னார்வலர்களையும் சிறப்பாக ஒருங்கிண்னைத்து நிவாரணப் பணிகளை மிகவும் விரைவுபடுத்தியுள்ளார்.
கண்ணில் பட்ட கெட்டவை:
சமூக விரோதிகள்: எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று சுனாமி சூறையாடிய வீடுகளை சமூக விரோதிகளும் சூறையாடியுள்ளனர்.மொழி தெரியாமல் வரும் தன்னார்வலர்களிடம் இதுதான் பாதிக்கப்பட்ட இடம் என்று எதையாவது காட்டி பொருட்களையும் சிலர் பறித்து விடுகின்றனர்.
வீணாகும் உதவிப் பொருட்கள்: மக்கள் பழைய துணிகளை வாங்க மறுத்து வீசி விடுகின்றனர். ஒரே மாதிரியான உணவை சாப்பிட மறுத்து வீணாக்குகின்றனர். புதிய துணி வேண்டுமாம், மீன் சோறு, பிரியாணி வேண்டுமாம், என்ன சொல்ல? இது கடலூரில் மட்டும் என்று நினைக்கிறேன். உண்மையாக நிறைய உதவி தேவைப்படும் நாகை பகுதி மக்களுக்கு இந்த பொருட்கள் போய் சேரவேண்டும்.
Monday, January 03, 2005
கடல் கொண்ட கடலூர்
Posted by வானம்பாடி at 3:43 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நீங்கள் கடைசி பாராவில் சொன்னது முழுவதும் உண்மை. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலுமே தேவைக்குதிகமான உதவிகள்தான் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாட்களாக மக்களுக்கு தேவைப்பட்ட தேங்காய் எண்ணெய், சோப்பு போன்றவற்றை விநியோகித்துக் கொண்டிருந்தேன். கடலூர் பகுதிகளில் இது போன்றவை தேவைப்படுமானால் உடனே என்னை தொடர்பை கொள்ளவும்.
நீங்கள் கடைசி பாராவில் சொன்னது முழுவதும் உண்மை. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலுமே தேவைக்குதிகமான உதவிகள்தான் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாட்களாக மக்களுக்கு தேவைப்பட்ட தேங்காய் எண்ணெய், சோப்பு போன்றவற்றை விநியோகித்துக் கொண்டிருந்தேன். கடலூர் பகுதிகளில் இது போன்றவை தேவைப்படுமானால் உடனே என்னை தொடர்பை கொள்ளவும்.
ராம்கி,
மன்னிக்கவும். நான் இப்போது சென்னை திரும்பி விட்டேன். கடலூர் தேவைகள் பற்றி எனக்கு இப்போது தகவல் இல்லை.
Post a Comment