Monday, January 31, 2005

ஜெயகாந்தன் -> (ஜெயேந்திரதாசன்)?

புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி இருக்கிறேன். முதலில் படித்தது ஜெயகாந்தனின் 'ஹர ஹர சங்கர'. மிகவும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன், மனிதர் ஏமாற்றிவிட்டார். இவர் எப்போது சங்கர மடத்திற்கு பக்க வாத்தியமானார்? அதில் வரும் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் தெரியாதாம், அவர் ஹிந்து மதத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுகிறாரம். பாவம் அவரை சுற்றி இருப்பவர்களின் சிறு தவறுகளுக்காக அவர் தண்டனை அனுபவிக்க நேருமாம். கடைசியில் சத்தியம் வெல்லுமாம். கஷ்டமடா சாமி! இதற்கிடையில் 'வன்னிய குல க்ஷத்ரியர்' என்ற ஜாதிப் பெயர் எப்படி உருவானது என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை வேறு நிகழ்த்தி இருக்கிறார். ஜெயகாந்தன் ஒரு மாபெரும் எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் இந்த நாவலை அவரா எழுதினார் என்றே தோன்றுகிறது.

7 comments:

Narain said...

வயசாயிடுச்சுல்ல....இனிமே கடவுள், சாமியாருன்னு போக வேண்டியதுதான். ஜெ. அதுக்கு விதிவிலக்கல்ல. பொறுத்துக் கொள்ள முடியாத விசயம்,இன்றளவும் என்னை துன்புறுத்தும் கேள்வி, ஏன் ஒரு கொள்கையை முன்னிருத்தி வாழ்பவர்கள் அனைவருமே பிற்காலத்தில் அந்தக்கொள்கையின் அடிப்படைக் கூட தெரியாதவர்களிடம் சென்று சரணாகதி அடைகிறார்கள் என்பதுதான்.ஜெயகாந்தன்,வீரமணி, தமிழ்க்குடிமகன் என பல உதாரணங்களை காட்ட இயலும். இது காலத்தின் கோலமா அல்லது வயதாவதினால் வரும் பலவீனமா?

ROSAVASANTH said...

நாராயணன் சொல்வது ஏற்றுகொள்ள கூடியதாய் இல்லை. ஜெயகாந்தன் தான் இதுவரை எதை சொல்லிவந்தாரோ, எதை தூக்கிபிடித்தாரோ அதன் வழியில்தான் போயிருக்கிறார். அவர் கொள்கை மாற்றம் அடைந்ததாய் தெரியவில்லை. அவரை வேறு எதுவாகவோ நம்பி, இப்போது ஏமாற்ற மடைபவர்களுக்கு வேறு யாரும் பொறுப்பாகமுடியாது.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

ஜெயகாந்தன் 80 களிலேயே ஜெயஜெய சங்கர என்றொரு சிறு நூலை எழுதினார். அப்போதே அவர் நிலைப்பாடு தெளிவாக இருந்தது. இப்போதும் மாறிவிடவில்லை. 25 வருசமாக இதே நிலையில்தான் இருக்கிறார்.

அருள்

சுதர்சன் said...

கொள்கை, நிலைப்பாடெல்லாம் இருக்கட்டும். 'ஜய ஜய சங்கர' எழுதும் போது இருந்த நிலைமை வேறு, மடாதிபதி வேறு. ஆனால் இப்போது ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு 'ஹர ஹர சங்கர' என்று கொடி பிடிக்க வேண்டிய அவசியம் என்னவோ? அனுராதா ரமணன் என்ற எழுத்தாளரின் வசைப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டோ?

Narain said...

ஒத்துக்கொள்கிறேன். சற்று ஒய்வாக இருக்கும்போது அவரின் சிறுகதைகள் பற்றிய தொகுப்பினைப் படித்தேன். என் கூற்று வேறு பொருள் படும் படியாய் பதிந்துவிட்டது, இது என் தவறே.அவர் மாறாமல் இன்னும் சனாதன தர்மத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார். நான் சொல்லவந்தது என்னவெனில், ஏன் ஒரு அளவிற்கு உயர்ந்தபின் (ஜெ மட்டுமல்ல, எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) எல்லாரும் ஒரு உயர்சாதி பிராமணனைப் போல ஆகிவிடுகிறார்கள்.aryanisation போல இது braminisation -னா?

Thangamani said...

ஜெயகாந்தனை மையமாகக் கொண்டு எழுந்த (திண்ணையில்) கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன் நடந்த விவாதங்களும் அவ்விவாதங்களின் பின் எனக்குள் எழுந்த கேள்விகளும், எனக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் ஜெயகாந்தன் எனக்கு ஒரு வழிபாட்டு உருவமல்ல, ஒரு முக்கியமான வழிகாட்டியாக இருந்தார். அந்த சமயத்தில் அவரது பிம்பம் உடைந்தது (நான் ஏற்கனவே ஜெய ஜெய சங்கர படித்திருப்பினும், நான் ஒரு ஆன்மீக புரிதலின் அடிப்படையில் அவர் அதை எழுதியிருக்கக் கூடும் என நம்பி வந்திருந்தேன்) மிக அதிர்ச்சியாக இருந்தது.

அது குறித்த எனது திண்ணைக் கடிதம்:
http://www.thinnai.com/pl1204031.html

அதற்கு முன் திண்ணையில் அது தொடர்பான கட்டுரைகள்:

1. http://www.thinnai.com/pl1127034.html
2. http://www.thinnai.com/pl1120036.html
3. http://www.thinnai.com/pl10300310.html
4. http://www.thinnai.com/pl1030035.html
5. http://www.thinnai.com/pl10230310.html

இக்கட்டுரைகளும், கடிதமும் உங்களின் புரிதலுக்கு எவ்விதத்திலாவது பயன்படுமாயின் நல்லது. நன்றி

ROSAVASANTH said...

தங்கமணி, நீங்க கொடுத்த இணைப்புகளை ஏற்கனவே படித்திருப்பதால் போய் பார்க்கவில்லை. உங்களுக்கு அது ஜெயகாந்தன் குறித்த புரிதலை கொடுத்ததாக சொன்னீர்கள். எனக்கு, நான் அப்போதுதான் முதன் முதலாய் படிக்க நேர்ந்த, சிவக்குமார் குறித்த நல்லதொரு புரிதலை அளித்தது. இன்றும் அது ரொம்ப பயனுள்ளதாய் இருக்கிறது.