ஜோயல் ஸ்போல்ஸ்கி என்பவர் மென்பொருள் பொறியியல் பற்றி பல நல்ல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவருடைய இணைய தளம் Joelonsoftware.com.
இந்த கட்டுரைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை நீங்கள் உங்கள் மொழியில் மொழிபெயர்க்க விரும்பினாலும் அவரிடம் தெரிவிக்கலாம். நான் தமிழில் மொழி பெயர்க்க விருப்பம் தெரிவித்து சிலவற்றை மொழி பெயர்த்தேன், சிலவற்றைப் பிழை திருத்தம் செய்தேன். இதைச் செய்யும் போது தான் தமிழில் எவ்வளவு கலைச் சொற்கள் இன்னமும் தேவை என உணர்ந்தேன். ஆங்கிலத்தில் மிகச் சுலபமாக புதிய சொற்களை உருவாக்கி விடுகிறார்கள், அதற்கு சிறந்த உதாரணம் 'Googling'. ஆனால் தமிழில் அப்படி முடிவதில்லை.
இப்பொழுது அந்த தளத்தின் தமிழ் வடிவம் இயங்கி வருகிறது. நேரமின்மை மற்றும் வேலைப்பளுவால் என்னால் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடமுடியவில்லை. நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் இப்பணியில் ஈடுபடலாம்.
Thursday, February 03, 2005
ஜோயல் ஆன் சாப்ட்வேர் (Joel on Software)
Posted by வானம்பாடி at 9:18 PM 6 comments
Wednesday, February 02, 2005
அன்றைய கணினி, இன்றைய கணினி!
40களின் 'ENIAC' திட்ட கணினியைதான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.
இது, 50களில் பிரபலமான எம்.ஐ.டியின் 'Whirlwind I' கணினியின் நினைவகப் பகுதி.
இது தற்போதைய 'Mac Mini'. இரு உள்ளங்கைகளில் அடங்கி விடுகிறது பாருங்கள்!
நன்றி! : சிநெட் ந்யூஸ்
Posted by வானம்பாடி at 8:59 PM 0 comments
21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை!
காமிக்ஸ் படிப்பதை பலரும் 'சின்னபிள்ளைத்தனமாகவே' கருதுகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த வரை அது ஒரு தனி உலகம். இந்தப் புவியின் உள்ளேயே அதுவும் மறைந்திருக்கிறது, படிப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அது. அந்த உலகத்தில் நடக்கும் கதையை யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஒளிந்து கொண்டு நான் பார்த்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றும். நான் முதன் முதலில் படிக்கத் தொடங்கியது 'ராணி காமிக்ஸ்', 1982 முதல் தினத்தந்தி நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது இது. என் கைக்கு காமிக்ஸ் புத்தங்கள் சிக்கியது 1984ல் தான். அப்போது தொடங்கி இப்போது 2005 வரை 21 வருடங்களக எனக்கு ஆர்வம் குன்றாமல் இருக்கும் விஷயம் காமிக்ஸ் படிப்பது மட்டும்தான். ராணி காமிக்சில் தொடங்கி பின்னர் அது லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் , திகில் காமிக்ஸ் , மினி லயன் என்று விரிவடைந்தது. ரானி காமிக்ஸ் தொடங்கிய புதிதில் அவர்கள் தரமான வெளிநாட்டு கதைகளையே வெளியிட்டார்கள். தரமான ஓவியங்கள், கலக்கலான மொழிபெயர்ப்பு என்று படிக்கவே குஷியாக இருக்கும். பின்னர் மெல்ல மெல்ல தரம் குறைய ஆரம்பித்தது, சுமாரான ஒவியங்கள், வசனங்களுடன் கதைகள் வர ஆரம்பித்து விட்டது. ராணி காமிக்சில் வந்த ஒரே 'சூப்பர் ஸ்டார்' ஜேம்ஸ் பாண்ட் மட்டும் தான். பின்னர் ராணி 'மாயாவி' கதைகளுக்கு மாறி, அந்த சரக்கும் தீர்ந்த பின்னர் சொந்தக் கதைகளை உருவாக்கத் தொடங்கியபோது நான் அதை படிப்பதையே நிறுத்தி விட்டேன்.
ஆனால் லயன் காமிக்ஸில் தொடர்ந்து நல்ல தரமான படைப்புகளையே வெளியிட்டு வருகிறர்கள். அமேரிக்க, ஐரோப்பிய கதைகளின் உரிமையை வாங்கி மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர். இவர்களின் தனித்துவமே இவர்களின் நகைச்சுவை கலந்த மொழிபெயர்ப்புதான். ஸ்பைடர் (ஸ்பைடர்மேன் அல்ல, இது வேறு ஸ்பைடர்), இரும்புக்கை மாயாவி, அ.கொ.தீ.க வை எதிர்த்துப் போராடும் சி.ஐ.டி லாரன்ஸ் & டேவிட், கௌபாய்களான டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன் இணை, இரும்பு மனிதன் ஆர்ச்சி ரோபோ, லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்டி ப்ளைசி, கேப்டன் டைகர் என ஒரு பெரிய நாயகர்கள் பட்டியல் லயனில் உண்டு. இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஸ்பைடரும், டெக்ஸ் வில்லரும் தான். ஸ்பைடரின் எகத்தாளம் நிறைந்த வசனங்கள் மிகவும் பாப்புலர். காமெடியில் கௌபாய் லக்கி லூக், சிக் பில் & கோ மற்றும் மதியில்லா மந்திரி ஆகியோர் பின்னியெடுப்பார்கள். சரியான வாசகர் ஆதரவு இல்லாதது, கதைப் பற்றாக்குறை மற்றும் பல காரணங்களால் லயன், முத்து தவிர மற்ற காமிக்ஸ்கள் நின்றுவிட்டன.
சிறு வயதில் இவற்றை என்னால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை, முழுக்க முழுக்க இரவலில் தான் படித்தேன். அப்பொழுது வாங்காமல் விட்டதை எல்லாம் இப்போது பழைய புத்தகக் கடைக்காரர்களின் கூட்டணியோடு வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறென். என்ன அப்போது 2 ரூபாய் தான் அசல் விலையே, இப்போது அதை 5 ரூபாய் கொடுத்து வாங்குகிறேன். இப்போது லயன் காமிக்ஸிலேயே பழைய கதைகளை 'க்ளாசிக்ஸ்' என் வெளியிட ஆரம்பித்துவிட்டதால் என் பாடு இன்னும் கொண்டாட்டம் தான்.
அப்போதிலிருந்து இப்போது வரை உள்ள ஒரு பிரச்னை இந்த லயன் காமிக்ஸ் வகையறாக்கள் சரியாகக் கடைகளில் கிடைக்காததுதான். அவர்களே தாமதமாக வெளியிடுவார்கள், அப்படியே வெளியிட்டாலும் கடைக்கு வந்து சேராது. போதிய வாசகர்கள் இல்லாததால் பல ஊர்களில் முகவர்களே கிடையாது. காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது எனத் தெரியாதவரை கண்ணில் படும் புத்தகக் கடையில் எல்லாம் 'இங்கே காமிக்ஸ் கிடைக்குமா?' என கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு கடைக்காரர் என்னைப் பார்த்து திருப்பிக் கேட்டார், 'அப்டின்னா என்னா சார்?'. அன்றிலிருந்து கேட்கும் முன் கடையை ஒரு முறை நன்றாக நோட்டம் விட்டு, கடைக்காரரின் முகவிலாசங்களைப் படித்து துணிவு பெற்ற பின்னரே என் வினா பாயும். கடைசியில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் கடையை கண்டு பிடித்து ஜென்ம சாபல்யமடைந்தேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு வாரமும் அந்தப் பெட்டிக் கடைக்காரரைப் பார்த்து 'காமிக்ஸ் ஏதும் வந்திருக்கா?' என வினாவி அவர் 'இருக்கு சார்' என சொல்லிவிட்டால் நான் அடையும் பரவசத்திற்கு அளவிருக்காது. வாங்கும்போதே இவ்வளவு சந்தோஷமடைந்து விடுவதால், படிக்கும் போது அதை விட சந்தோஷம் சற்று குறைவாகத்தான் இருக்கிறது. :) 7 வயதில் தொடங்கிய ஒரு விஷயம், அன்றைக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்ததோ அதே அளவு அல்லது அதை விட சற்றுக் கூடுதலான சந்தோஷத்தையே இன்றைக்கும் கொடுக்கிறது...
Posted by வானம்பாடி at 1:05 AM 21 comments