Wednesday, February 02, 2005

21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை!

காமிக்ஸ் படிப்பதை பலரும் 'சின்னபிள்ளைத்தனமாகவே' கருதுகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த வரை அது ஒரு தனி உலகம். இந்தப் புவியின் உள்ளேயே அதுவும் மறைந்திருக்கிறது, படிப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அது. அந்த உலகத்தில் நடக்கும் கதையை யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஒளிந்து கொண்டு நான் பார்த்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றும். நான் முதன் முதலில் படிக்கத் தொடங்கியது 'ராணி காமிக்ஸ்', 1982 முதல் தினத்தந்தி நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது இது. என் கைக்கு காமிக்ஸ் புத்தங்கள் சிக்கியது 1984ல் தான். அப்போது தொடங்கி இப்போது 2005 வரை 21 வருடங்களக எனக்கு ஆர்வம் குன்றாமல் இருக்கும் விஷயம் காமிக்ஸ் படிப்பது மட்டும்தான். ராணி காமிக்சில் தொடங்கி பின்னர் அது லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் , திகில் காமிக்ஸ் , மினி லயன் என்று விரிவடைந்தது. ரானி காமிக்ஸ் தொடங்கிய புதிதில் அவர்கள் தரமான வெளிநாட்டு கதைகளையே வெளியிட்டார்கள். தரமான ஓவியங்கள், கலக்கலான மொழிபெயர்ப்பு என்று படிக்கவே குஷியாக இருக்கும். பின்னர் மெல்ல மெல்ல தரம் குறைய ஆரம்பித்தது, சுமாரான ஒவியங்கள், வசனங்களுடன் கதைகள் வர ஆரம்பித்து விட்டது. ராணி காமிக்சில் வந்த ஒரே 'சூப்பர் ஸ்டார்' ஜேம்ஸ் பாண்ட் மட்டும் தான். பின்னர் ராணி 'மாயாவி' கதைகளுக்கு மாறி, அந்த சரக்கும் தீர்ந்த பின்னர் சொந்தக் கதைகளை உருவாக்கத் தொடங்கியபோது நான் அதை படிப்பதையே நிறுத்தி விட்டேன்.

ஆனால் லயன் காமிக்ஸில் தொடர்ந்து நல்ல தரமான படைப்புகளையே வெளியிட்டு வருகிறர்கள். அமேரிக்க, ஐரோப்பிய கதைகளின் உரிமையை வாங்கி மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர். இவர்களின் தனித்துவமே இவர்களின் நகைச்சுவை கலந்த மொழிபெயர்ப்புதான். ஸ்பைடர் (ஸ்பைடர்மேன் அல்ல, இது வேறு ஸ்பைடர்), இரும்புக்கை மாயாவி, அ.கொ.தீ.க வை எதிர்த்துப் போராடும் சி.ஐ.டி லாரன்ஸ் & டேவிட், கௌபாய்களான டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன் இணை, இரும்பு மனிதன் ஆர்ச்சி ரோபோ, லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்டி ப்ளைசி, கேப்டன் டைகர் என ஒரு பெரிய நாயகர்கள் பட்டியல் லயனில் உண்டு. இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஸ்பைடரும், டெக்ஸ் வில்லரும் தான். ஸ்பைடரின் எகத்தாளம் நிறைந்த வசனங்கள் மிகவும் பாப்புலர். காமெடியில் கௌபாய் லக்கி லூக், சிக் பில் & கோ மற்றும் மதியில்லா மந்திரி ஆகியோர் பின்னியெடுப்பார்கள். சரியான வாசகர் ஆதரவு இல்லாதது, கதைப் பற்றாக்குறை மற்றும் பல காரணங்களால் லயன், முத்து தவிர மற்ற காமிக்ஸ்கள் நின்றுவிட்டன.

சிறு வயதில் இவற்றை என்னால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை, முழுக்க முழுக்க இரவலில் தான் படித்தேன். அப்பொழுது வாங்காமல் விட்டதை எல்லாம் இப்போது பழைய புத்தகக் கடைக்காரர்களின் கூட்டணியோடு வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறென். என்ன அப்போது 2 ரூபாய் தான் அசல் விலையே, இப்போது அதை 5 ரூபாய் கொடுத்து வாங்குகிறேன். இப்போது லயன் காமிக்ஸிலேயே பழைய கதைகளை 'க்ளாசிக்ஸ்' என் வெளியிட ஆரம்பித்துவிட்டதால் என் பாடு இன்னும் கொண்டாட்டம் தான்.


அப்போதிலிருந்து இப்போது வரை உள்ள ஒரு பிரச்னை இந்த லயன் காமிக்ஸ் வகையறாக்கள் சரியாகக் கடைகளில் கிடைக்காததுதான். அவர்களே தாமதமாக வெளியிடுவார்கள், அப்படியே வெளியிட்டாலும் கடைக்கு வந்து சேராது. போதிய வாசகர்கள் இல்லாததால் பல ஊர்களில் முகவர்களே கிடையாது. காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது எனத் தெரியாதவரை கண்ணில் படும் புத்தகக் கடையில் எல்லாம் 'இங்கே காமிக்ஸ் கிடைக்குமா?' என கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு கடைக்காரர் என்னைப் பார்த்து திருப்பிக் கேட்டார், 'அப்டின்னா என்னா சார்?'. அன்றிலிருந்து கேட்கும் முன் கடையை ஒரு முறை நன்றாக நோட்டம் விட்டு, கடைக்காரரின் முகவிலாசங்களைப் படித்து துணிவு பெற்ற பின்னரே என் வினா பாயும். கடைசியில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் கடையை கண்டு பிடித்து ஜென்ம சாபல்யமடைந்தேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு வாரமும் அந்தப் பெட்டிக் கடைக்காரரைப் பார்த்து 'காமிக்ஸ் ஏதும் வந்திருக்கா?' என வினாவி அவர் 'இருக்கு சார்' என சொல்லிவிட்டால் நான் அடையும் பரவசத்திற்கு அளவிருக்காது. வாங்கும்போதே இவ்வளவு சந்தோஷமடைந்து விடுவதால், படிக்கும் போது அதை விட சந்தோஷம் சற்று குறைவாகத்தான் இருக்கிறது. :) 7 வயதில் தொடங்கிய ஒரு விஷயம், அன்றைக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்ததோ அதே அளவு அல்லது அதை விட சற்றுக் கூடுதலான சந்தோஷத்தையே இன்றைக்கும் கொடுக்கிறது...

21 comments:

பரணீ said...

சிறு வயது நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டீர்.

//சிறு வயதில் இவற்றை என்னால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை, முழுக்க முழுக்க இரவலில் தான் படித்தேன்.//

எனக்கும் இந்த அனுபவம் உண்டு, வாங்கிய கடையிலேயே படித்த புத்தகங்களை கசங்காமல் உடனடியாக திருப்பி கொடுத்தால் பாதி விலைக்கு எடுத்துக் கொள்வார்கள், அதனுடன் இன்னொரு பாதி போட்டால் மீண்டும் ஒரு புதுப் புத்தகம் கிடைக்கும். :-)

சுதர்சன் said...

நீங்கள் சொல்லும் இந்த பழக்கம் சென்னையில் இருக்கிறது. நான் பழைய காமிக்ஸ் வாங்கும் போது, என்னிடம் விற்பதை விட அவர்களுக்கு இந்த முறையே லாபமென்பதால் 'திருப்பி கொண்டு வாங்க சார்' என்ற வேண்டுகோளுடன் தான் கொடுப்பார்கள். வாடிக்கையான ஒரு பழைய புத்தகக் கடைக்காரர் 'நீங்க திருப்பி குடுக்க மாட்றீங்க சார்' என எனக்கு விற்க மறுத்து விட்டார். :)

இராதாகிருஷ்ணன் said...

இதேபோன்ற அனுபவம்தான் எனக்கும். ராணி காமிக்ஸின் 'சுறாவேட்டை' (அவர்களது மூன்றாவது புத்தகம் என்று நினைக்கிறேன்) புத்தகத்தை ஐந்தைந்து காசுகளாகச் சேர்த்து 1.50 ரூபாய்க்கு வாங்கியது அந்தக் காலச் சாதனை! பேருந்து நிலையக் கடைகளின் பக்கம் செல்லும்போது லயன் மற்றும் முத்து காமிக்ஸுகளைத் தேடி கண்கள் அலையும் (எல்லா சமயத்திலும் வாங்க முடியாவிட்டாலும்). சிறுவனாக இருந்தபோது நிறைய படக்கதைகளைச் சேர்த்து வைத்திருந்தேன். அவற்றைப் பாதுகாக்கத் தவறியதற்கு இப்போது வருத்தம் ஏற்படுகிறது. :(

சுதர்சன் said...

'சுறா வேட்டை' என்னிடம் இருக்கிறது. அப்போது விட்டதையெல்லாம் இப்போது பிடித்து வைத்திருக்கிறேன். :) நீங்கள் தமிழகத்தில் வசிப்பவரானால், லயனின் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வாங்கலாமே. இரண்டு பழைய கதைகளை சேர்த்து ஒரு புத்தகமாக 'பாக்கெட் சைஸில்' இப்போது வெளியிடுகிறார்கள்.

சன்னாசி said...

1986ல் ராணி காமிக்ஸ் 1.50 என்று நினைவு. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரும். தினமும் பத்து காசு, ராணி காமிக்ஸ் மாதமிருமுறை. இந்திரஜால் காமிக்ஸ் அப்போதெல்லாம் எட்டாக்கனி. ஒவ்வொரு புத்தகமும் ஐந்தோ ஏழோ ரூபாய்கள். ஒருமுறை என் பள்ளித் தோழனொருவன் வீட்டில் பைண்ட் செய்யப்பட்ட ஐந்து இந்திரஜால் காமிக்ஸ் தொகுதிகள் - கிட்டத்தட்ட நூற்றைம்பது புத்தகங்கள் - பார்த்ததும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் எத்தனை தடவை குதித்தேனென்று எனக்கே நினைவில்லை!! இந்திரஜால் காமிக்ஸில் மட்டும்தான் இந்தியக் கதாநாயகர்களைப் பார்த்துள்ளதாய் நினைவு (இன்ஸ்பெக்டர் பகதூர்)!! ஃப்ளாஷ் கார்டன், வேதாளர், மந்திரவாதி மாண்ட்ரேக் என்று சுவாரஸ்யமான கதாநாயகர்கள். (வேதாளர் ஒரு வெள்ளைக்காரர், சுற்றியுள்ளவர்களெல்லாம் ஆஃப்ரிக்க அடிமைகள், மாண்ட்ரேக் வெள்ளைக் கதாநாயகர், லொத்தார் என்ற கறுப்பு இளவரசன் வெறும் சைடுகிக் என்ற ரீதியில் விமர்சனங்களையெல்லாம் பிறகு படித்தபோது வருத்தமாகத்தான் இருந்தது. அதையெல்லாம் யோசிக்கத்தெரியாத குழந்தைப்பருவத்தில் வெள்ளையாவது கறுப்பாவது...) பின்பு ஒருமுறை ஏதோ ஒரு பள்ளி விடுமுறையில், கிலோ கணக்கில் காமிக்ஸ் விற்ற பழைய புத்தகக்கடையொன்றைப் பிடித்தேன். கிலோ பத்து ரூபாய். படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தால் ஐந்து ரூபாய். சில வாரங்களில் அந்தக் கடையும் காலி...காமிக்ஸ்கள் சாகாவரம் பெற்றவை!! லயன் காமிக்ஸில் கடல்பயணம் போகும் இன்னொரு கோஷ்டி இருக்கிறதே...ஒரு குடிகார காப்டன் மற்றும் சில கைத்தடிகள்...மறந்துவிட்டேன்....

கண்முன் 'உள்ளே வெளியே' கொசுவர்த்திச் சுருள் மாதிரி ஃப்ளாஷ்பாக் நினைவுகள் வந்து போகின்றன.

இராதாகிருஷ்ணன் said...

நான் தற்போது தமிழகத்தில் இல்லை. விடுமுறைக்கு அங்கு வரும்போது வாங்க முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி!

இராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by a blog administrator.
சுதர்சன் said...

கடல் பயண குழுவா? அது ப்ரின்ஸ் குழுதான். கேப்டனாக வரும் ஒரு கிழவன் தான் குடிகாரன், பிரின்ஸ் அதன் நாயகன்.

Thangamani said...

நானும் நிறைய கதை படிக்க அலைந்து, நூலகம் நூலகமாக திரிந்திருக்கிறேன். காமிக்ஸ் நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் சில் வருடங்களுக்கு முன் நான் calvin and Hobbs படித்தேன். அதன் பரம ரசிகனாகிவிட்டேன். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி மிக அருமையானது.
நன்றி

maalan said...

எல்லாப் படக்கதைகளும் (காமிக்ஸ்க்கு தமிழ்) சிறு பிள்ளைத்தனமானவை அல்ல். ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் கதைகளில் பாராளுமன்ற அரசியல் பற்றிய நுட்பமான நகைச்சுவையைப் பார்க்கலாம். ரோமானிய வரலாற்றைப் படித்துஇருந்தால் அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

அதே போல பிங்க் பாந்தர் படக்கதைகள். முதலில் முழுக்கதைகளாக வந்தது பின்னால் படக்கதைகளாகவும் வந்தன. வுடி ஆலன் ஓர் உதாரணம்.

வுடி ஆலன் பற்றி யாராவது வலைப்பதிவுகளில் எழுதக்கூடாதா?

ஏற்கனவே ஜெயமோகன் இணைய வாசகர்களுக்கு சீரியஸ்நெஸ் கிடையாது என்று பிலாக்கணம் பாடிக் கொண்டிருக்கும் போதுதானா படக்கதைகள் பற்றி நீங்கள் எழுத வேண்டும்? ம்...பட்ட காலிலே படும்.

சுதர்சன் said...

நன்றி மாலன்! படக்கதை என்று சொன்னால் எஙகே மற்ற புத்தகங்களில் வரும் படத்துடன் கூடிய கதைகள் என்று புரிந்து கொள்வார்களோ என 'காமிக்ஸ்' என்றே விட்டு விட்டேன். ஆனால், 'கதா' என்ற வடமொழிச்சொல்லிலிருந்து வந்த 'கதை'க்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? இது போன்ற சொற்களின் பட்டியல் ஒன்று வைத்திருக்கறேன், விரைவில் அவற்றை ஒரு பதிவாக இட எண்ணியிருக்கிறேன்.

சுதர்சன் said...

'ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஒபிலிக்ஸ்' போல லயனில் வெளிவரும் 'மதியில்லா மந்திரி' (அசல் என்னவென்று தெரியவில்லை) கதைகளிலும் மத்திய ஆசிய அரசமைப்பு முறையைப் பற்றிய நையாண்டி இருக்கும்.

படக்கதைகள் 'தீவிர' இலக்கியமாக (அல்லது இலக்கியமாகவே கூட) இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தனி கவனம், ஒரு காட்சியை படமாக்கும் போது ஒவியர்கள் காட்டும் நுட்பம், இவை நம்மை அசர வைக்கும். ஒவ்வொரு படக்கதையின் பின்னும் ஒளித்திருப்பது மாபெரும் உழைப்பு. சினனச் சின்னக் கோடுகளின் மூலம் உணர்ச்சிகளை வேறுபடுத்திக் காட்டும் ப்ரம்மாக்கள் அவ்வோவியர்கள்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

அன்பின் சுதர்ஸன்,

அருமையான பதிவு. நினைவலைகளைக் கிளறுகிறது. முன்பு மரத்தடியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருந்த ஒரு கட்டுரையை எனது வலைப்பதிவில் இடுகிறேன். நம் எல்லாருக்கும் நினைத்து நினைத்து மகிழ பொதுவான சமாசாரங்கள் நிறையவே இருக்கின்றன.

அன்புடன்
சுந்தர்

Muthu said...

சுதர்சன்,
2 ரூபாய்க்கு அந்தக் காலத்தில் வாங்கமுடியாமல் லைம்ரரிக்கும் நண்பர்களிடம் அலைந்தது நினைவுக்கு வருகிறது. இன்றைக்கும் அதைப் படித்தால் சலிக்காது என்றே நினைக்கிறேன் :-) .

சுதர்சன் said...

ஆமாம் முத்து, அவை எனக்கு இன்றும் படிக்க சலிப்பதில்லை!

dondu(#4800161) said...

ஆஸ்டிரிக்ஸ் மற்றும் ஓபெலிக்ஸ் காமிக்ஸ்களை அவற்றின் மூல மொழியாம் பிரெஞ்சிலேயே படித்துள்ளேன். சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விடும். ஆங்கில மொழியில் வரும் வைடல்ஸ்டடிஸ்டிக் மூலத்தில் அப்ராராகூர்ஸிக்ஸ். மற்றப்படி டாக்மாடிக்ஸ்=இடெஃபிக்ஸ், காகஃபோனிக்ஸ்=அச்ச்யூரான்ஸ்டூரிக்ஸ் இத்யாதி இத்யாதி. ஆங்கிலப் பெயர்கள் நன்றாகவே இருக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்

சுதர்சன் said...

நன்றி டோண்டு, நானும் ஆஸ்டெரிக்ஸில் வரும் பெயர்களில் ஒளிந்துள்ள எள்ளலை மிகவும் ரசித்திருக்கிறேன். கற்பனா சக்தியின் உச்சம் ஆஸ்டெரிக்ஸ் படக்கதைகள்.

rEdshiFt said...

I was editing the wikipedia page on Lion Comics and was re-searching the net for material on the history of Tamil Comics. Your blog entry comes up prominantly in Google

Keep up the good work :)

Im a hardcore muthu/lion fan too and your entry kicked a lotta Nostalgia .... good 'ol times :)

_
Do visit the wiki page at http://en.wikipedia.org/wiki/Lion_comics and add/edit as needed.

சுதர்சன் said...

redshift,

Thanks, will try to add more to the wiki entry.

ILLUMINATI said...

காமிக்ஸ் வாசகர் ஒருவரை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தான்.உங்களை விட ஜூனியர் என்றாலும்,உங்களைப் போலவே நானும் பழைய புத்தகக் கடை மூலமாகவே அதிகம் சேகரித்தேன்.சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.
அவ்வப்போது காமிக்ஸ் பற்றி எழுதுவதும் உண்டு.நீங்களும் எழுதுங்கள் ப்ளீஸ். :)

soundararajan said...

soundararajan, 56 years , salem

naan oru theevira comics vasagan. muthalil irmubukai maayavithan pattithen yennudaiya 15 vayathil. indruvarai naan comicsin adimai. eppothum varuda santha kattivittu aavaludan comics bookkukka kathiruppen. comics vasagrkellam yen vazhlthukkal.