Friday, July 01, 2005

கெட்டது குடி - மைக்ரோசாப்ட் க்ளாரியாவை வாங்குகிறதாம்!

உளவு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான க்ளாரியாவை மைக்ரோசாப்ட் வாங்கப்போகிறதாம். இந்த க்ளாரியா 'கேட்டர்' என்ற பெயரில் உளவு மென்பொருள்களை தயாரித்து உங்கள் கணிணியில் திருட்டுத்தனமாக நிறுவிக் கொண்டிருந்தது. பல கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த இந்நிறுவனம் தனது பெயரை 'க்ளாரியா' என்று மாற்றிக் கொண்டு தனது சேவையை மட்டும் மாற்றாமல் தொடர்ந்து வந்தது. இப்பொழுதும் 'காசா' வை நிறுவும்போது கூடவே ஒட்டிக் கொண்டு க்ளாரியாவும் வந்து விடும். இப்படிப்பட்ட ஒரு ஒட்டுண்ணியை மென்பொருள் பெரியண்ணன் மைக்ரோசாப்ட் வாங்கப் போகிறது என்ற செய்தி வயிற்றில் புளிய மரத்தையே கரைக்கிறது.


இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'வலை மேயும் அனுபவத்தை பயனருக்கு இன்னும் சிறப்பாக்கப் போகிறோம்'. எப்படி? ;-) எப்படி சிறப்பாக்குவார்கள் தெரியுமா? உங்களின் வலை மேயும் பழக்கத்தை ஆராய்ந்து அதற்கேற்ற விளம்பரங்களை உங்களுக்கு காட்டுவார்கள். ஏற்கெனெவே IE-யிலும் MS Office-லும் 'ஸ்மர்ட் டக்ச்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி பலத்த எதிர்ப்பால் IE-யில் இருந்து மட்டும் பின்னர் தூக்கினார்கள். இந்த ஸ்மார்ட் டாக் செய்யும் திருவேலை என்னவென்று பார்ப்போம். என்னுடைய தளத்தில் நான் தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். மைக்ரோசாப்டிற்கு 'சமஸ்க்ருதவாசனை' தளத்துக்காரர்கள் வலை விளம்பரம் செய்ய காசு கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், என் தளத்தை IE-ல் மேயும்போது தமிழ்மணம் இணைப்பை சுட்டினால் அது 'சமஸ்க்ருதவாசனை' தளத்திற்கு கொண்டு போய் சேர்க்கும். இப்படியான 'அற்புதமான' பயனர் அனுபவம் உங்களுக்கு கிட்டும். நல்லவேளையாக பலத்த எதிர்ப்பால் இது கைவிடப்பட்டது.

இப்பொழுது க்ளாரியாவை வாங்கி என்ன விதமான திருவிளையாடல்களை நிகழ்த்த பெரியண்ணன் திட்டமிட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை மைக்ரோசாப்டின் அடுத்த இயங்குதளமான 'நீளக்கொம்பில்' (அதான் லாங்ஹார்ன் சாரே!) க்ளாரியாவின் நிரலும் சேர்த்தே நிறுவப்படலாம் அல்லது அவ்வளவு நாள் பொறுக்க முடியாவிட்டால் 'Windows Security Update' என்ற பெயரில் எளிதாக உங்கள் தற்போதைய இயங்குதளத்திலேயெ கூட நிறுவி விடலாம். எப்படி வசதியோ? ;-)

பி.கு:

என் பதிவை 77 சதவிகிதத்தினர் IE-ல தான் மேய்வதாக StatCounter காட்டுகிறது. அப்பப்பொ பயர்பாக்ஸ், ஓபரா போன்றவற்றிலும் மேயுங்கள், எதற்கும் பின்னர் கைகொடுக்கக் கூடும்.

லினக்ஸ் போன்ற இயங்குதளங்களையும் கவனிப்பது கூடுதல் நலம். 100 சதவிகிதம் (நான் உட்பட) ஏதோவொரு மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில்தான் மேய்கிறோம் என்கிறது என் பதிவுப் புள்ளிவிவரம். :(

15 comments:

.:dYNo:. said...

>>>>தளத்தை IE-ல் மேயும்போது தமிழ்மணம் இணைப்பை சுட்டினால் அது 'சமஸ்க்ருதவாசனை' தளத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்.


Never heard of any such thing? Where did u get that from?

.:dYNo:.

contivity said...

சுதர்சன்,

நுண்மென்மை (Microsoft) மீது உங்களுக்கு நிறைய கோபம் இருக்கிறது என்பது என் எண்ணம்.

முதலையால் (Gator) பட்ட பெரும் அவஸ்தை மறப்பதற்குள் இந்த செய்தி உண்மையில் வயிற்றில் புளிய மரத்தைத் தான் கரைக்கிறது.

மிகவும் சீரியஸான செய்தியை அதன் தாக்கம் குன்றாமல் தேர்ந்த நகைச்சுவையுடன் வழங்கி உள்ளீர்கள்..
அப்புறம் ஒரு செய்தி.. நான் 'நெருப்பு நரி'யுடன் தான் உலாவுகிறேன்.

வானம்பாடி said...

Here: http://librenix.com/?inode=1001

Googling for IE smart tags will also fetch you hoards of links: http://www.google.com/search?q=IE+smart+tags

வானம்பாடி said...

Contivity, உங்கள் பின்னூட்டும் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. நம்பக்கூடிய ஒரே நரி ´நெருப்பு நரி´தான் என்ன.. பனங்காட்டு நரியானன நுன்மென்மையை சலசலக்க வைக்க நெருப்பு நரியால்தான் முடிந்திருக்கிறது.

//நுண்மென்மை (Microsoft்) மீது உங்களுக்கு நிறைய கோபம் இருக்கிறது என்பது என் எண்ணம்//
என்ன செய்ய.. வரலாறு அப்படி. :)

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

சுதர்சன்,
உங்கள் அதங்கம் புரிகிறது. ஆனால் பெரிய முதலைகள் சின்னக் குதலைகளை முழுங்கி ஏப்பம் விட நினைக்கும் போது நாம் என்ன செய்வது. என்னுடைய பதிவின் வருகையாளர்கள் பலரும் நானும் உபயோகிப்பது IE தான்.

வானம்பாடி said...

கங்கா,
குதலை - அருஞ்சொற்பொருள்?

வானம்பாடி said...

//முழுங்கி ஏப்பம் விட நினைக்கும் போது நாம் என்ன செய்வது. //

நாம் அப்படி இருந்து விட முடியாது கங்கா. ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன், பயர்பாக்ஸ் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன தடை?

Narain Rajagopalan said...

க்ளாரியாவினை வாங்குவது ஒரு புறமிருக்கட்டும். இப்போதே நுண்மென்மை [யாருய்யா பேரு வச்சத்து, தமிழ்குடிதாங்கியா ;-)]XPயில் நீங்கள் வலைமேயும்போது நடக்கும் அத்தனை சங்கதிகளையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். க்ளாரியாவும் சேர்ந்தால், விளங்கிடும்.

என்னுடைய பயம் இப்போது மைக்ரோசாப்ட் கூட இல்லை. கூகிள்தான் என்னுடைய முதன்மை பயமாக மாறி வருகிறது. என்னதான் கூகிள் ரசிகனாக விசிலடித்தாலும், தற்போது என்னுடைய வலைமேயும் பாணி, தேடு சொல், என் வலை பழக்கம் என என் கணினியினை திறந்து நான் செய்யும் அத்தனையும் கூகிளுக்கு அத்துப்படி, இந்நிலையில் என் பயம் கூகிள் வேறு முயற்சிகளில் இறங்கிவிட்டால், நான் தீர்ந்தேன்.

மைக்ரோசாப்ட் முதலில் லாங்ஹார்னை நிறுவட்டும். எனக்கென்னமோ அது 2007-இல் தான் வெளிவருமென்று தோன்றுகிறது.

porukki said...

contivity எழுதியதை வைத்து இப்பதான் உங்கள் குறிப்பை பார்த்தேன். சுவாரசியமாக எழுதியிருக்கின்றீர்கள். Microsoft இன் அற்பத்தனங்களைப் பற்றி இன்னும் எழுதுங்கள்.

- porukki..::
http://porukki.blogsome.com

porukki said...

contivity தந்த தகவல் மூலம் உங்களின் இந்தப் பக்கத்திற்கு வர முடிந்தது. உங்கள் குறிப்பை சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். Microsoft அடாவடித்தனம் பற்றி இன்னும் எழுதுங்கள்.

:-porukki
http://porukki.blogsome.com

contivity said...

நாராயணனின் சந்தேகம் சரியாகும் வாய்ப்பு பெருமளவில் உள்ளது.. என்ன தான் சூப்பர்ஸ்டாராக (No pun intended) இருந்தாலும் மெல்ல மெல்ல கூகிளும் ஒரு பெரியண்ணன் போக்கில் செல்கிறது. அவர்களின் ஜிமெயில் 1ஜிபி யாக இருந்து இப்போது 2 ஜிபி யாகி இருக்கிறது. இது எதையும் நீங்கள் அழித்துவிடாமல் இருப்பதற்காகவே.. அதனுடைய குக்கிகள் சநதேகத்திற்குரியவையாகவே உள்ளன.

கூகிளின் இன்னொரு முகத்தை அறிய

www.googlewatch.com

செல்லுங்கள்

தருமி said...

ஏதோ கொஞ்சம் புரியுறது மாதிரியும் இருக்கு; புரியாதது மாதிரியும் இருக்கு.
பெரியண்ணன் மட்டும் புரியுது.

Anonymous said...

Really you r making good work of trying to keep microsoft on it heels.Hope u will succeed.

Anonymous said...

In fact due to too much of info onthe net , i would like to have an 24*7 assistant who can search the net and give what i am loking for. There is lot of information pollution. I welcome the idea. Offcourse the end user has to be told in advance.
Swami

Sridhar V said...

Microsoft bashers வரிசையில் மற்றுமொரு பதிவாக இருக்கிறது.

நீங்கள் சொல்லியிருக்கும் உதாரணம் 'தமிழ்மணம்', 'சமஸ்க்ருதவாசனை' சரியாகப் படவில்லை.

smart tag என்பது ஒரு பயனீட்டாளரின் கணிணியில் சில வசதிகளை செய்து கொடுக்கும் முயற்சி. Macros போல. அதை நான் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம் என்று விட்டுவிடலாம். அது மட்டுமல்ல. ஒரு வலைப்பக்கத்தின் லிங்க்கிற்கும் smart tag கொடுக்கும் லிங்க்கிற்க்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

அதன் பயன்கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன.

சரி. மைக்ரோசாப்ட் 80% OS சந்தையை பிடித்து வைத்திருக்கிறது. மோனோபோலி என்று பயப்படுகிறீர்கள்.
google என்னய்யா பாவம் செய்தது? அது அளிக்கும் அத்தனை சேவைகளும் இலவசம். உங்களுக்கு வேண்டாம் என்றால் கழட்டி விட்டுவிட்டு போக வேண்டிதானே?

சில வருடங்களுக்கு முன்னர் intel chip ID disclose பண்றாங்கன்னு குற்றச்சாட்டு. இன்னிக்கு எல்லாரும் IP Stat counter இல்லாத வலைத்தளம் இருக்கிறதா?

என்னமோ... யாரையாவது திட்டனும்னு முடிவு பண்ணிட்டு சொல்ற மாதிரி இருக்கு. :-(. நான் ஒன்றும் மைக்ரோசாப்ட் அட்வகேட் இல்லை. ஆனால் இதுவரை எந்த குடியும் கெட்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.