Tuesday, June 07, 2005

கிராமப்புற மாணவர்களுக்கு நீண்டகால நலன்..?

கிராமப்புற மானவர்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டிலேயே உள் ஒதுக்கீட்டு முறை சில காலத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்டது, அது இப்போது இருக்கிறதாவென்று தெரியவில்லை. நுழைவுத் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டலும் இந்த ஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போதும், கிராமப்புற மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை, வேண்டுமானால் பொள்ளாச்சி, ராசிபுரம் போன்ற சிறு நகர மாணவர்கள் இந்த ரத்தால் அதிகம் பயன் பெறக் கூடும்.

ஒருவேளை நமது பாடத்திட்டங்களும் தேர்வு முறைகளும் உருப்போடுவதை ஆதரிக்காமல் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் மாற்றப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது நகரங்களில் அதற்கென்று 'கோச்சிங் சென்டர்'கள் முளைக்கும், நகர மாணவர்கள் அதற்கு உடனடியாக தயார்படுத்தப்படுவார்கள், மீண்டும் கிராமப்புற மாணவர்கள் சரியான ஆசிரியர்களும் வசதியும் இல்லாமல் அவதிப்படுவார்கள். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சியும், ஊக்கமும், வசதியும், தேர்வு முடிவுகளுக்கு பொறுப்பேற்க வைக்கும் 'accountability'-யும் கொடுப்பதுதான் நீண்டகால அடிப்படையில் பயன் தரும், எந்த கொள்கை மாற்றமும் அவர்களை பாதிக்காதபடி காக்கும்.

அண்ணா பல்கலை, என்.ஐ.டி திருச்சி (முன்னாள் ஆர்.இ.சி) போன்றவற்றின் பிம்பங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. ஐ.ஐ.டி-க்களின் பிம்பங்களைப் பாருங்கள், அரசின் தலையீடு இல்லாததாலேயே அவை நீடித்திருக்கின்றான, உலகளவில் போற்றப்படுகின்றன. அவற்றிற்கு ஈடாக இல்லாவிட்டாலும் மாநில அளவிலும் இப்படிப்பட்ட பிம்ப உருவாக்கல் அவசியமே. நாளொரு கொள்கையும் பொழுதொரு முடிவுமாக எடுத்து அவற்றின் நம்பகத்தன்மையை குறைத்து விடக் கூடாது.

ஷங்கரின் பதிவில் பின்னூட்டமிடப்போய் சற்று நீண்டு விட்டதால் இந்த தனிப்பதிவு.

2 comments:

ப்ரியன் said...

அண்ணாச்சி கிராமபுற இட ஒதுக்கீடு அம்மா வந்த சூட்டில் தூக்கியாச்சுங்க.அப்புறம் நீங்க சொன்னது சரிதாங்க அடுத்து கோச்சிங் சென்டர்கள் முளைக்கும் மீண்டும் அதே பழைய கதைதான் கிராமபுற பசங்களுக்கு

Anonymous said...

கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இருந்தபோது கூட சில நகர்புற மாணவர்கள் 11ம் வகுப்பு வரை நகர்புற நல்ல பள்ளிகளில் பயின்று விட்டு 12ம் வகுப்பிற்காக மட்டும் நகரங்களுக்கு மிக அருகில் உள்ள (உ.தா. ஆவடி போன்ற) கிராமப்புற பள்ளிகளில் பயின்றதாக செய்திகள் வெளியாயின.